பாலை நில ரோஜா
வருகிறேன் என்று சொல்லிய என்
மணவாளனை வழியனுப்பிய பாதை இதுதான்!
உந்தன் கால் தடம் கண்ட மணலோ
கடந்து போனது கண் எட்டா தொலைவிற்கு!
உன் வருகையை எதிர் கொண்டே நித்தமும் காத்திருக்கிறேன்
இந்த கடுமணலின் கற்களோடு கற்களாய்!
நீ ஆரத்தழுவிய என் அங்கமில்லாம் இன்று
அழுக்கடைந்த பசலை நோயால் வாடுகிறது!
என்னவனே!
என்னதான் நேர்ந்தது உனக்கு!
தூது கூற ஒருவர் கூட இல்லையா!
உன்னை நினைத்து பார்க்கும் போதெல்லாம்
என் நெஞ்சம் நெருஞ்சி முட்களாய் குத்துகிறது!
எஞ்சோட்டு பெண்களெல்லாம் தலைவன்களோடு
இருக்கும் பொழுது கன்னி மட்டும் காட்டு மரமாய் தனித்திருக்கிறேன்!
உன்னை ஏற்றால் என் காலம் முழுதும் காப்பேன் என்றாய்!
இருப்பினும் இன்று கானல் நீராய் நீ போனதேனோ!
அன்றொரு நாள் கொடி இடைகொண்ட நதியோரம்
நன் குடம் தூக்கிய நேரத்தில் கொடும்பாவி உன்னை கண்டேன்!
அந்த நொடி என் வாழ்வில் நிகழ்ந்திடாமல் போயிருந்தால்
அடங்கி இருப்பேனே என் அன்னையின் செல்ல பிள்ளையாக!
எங்கு தான் சென்றாய் என் காதலனே!
இருப்பது என் உயிர் ஒன்றே!
வந்து விடுவாயா நான் விழி மூடும் முன்பு!
இல்லை காண வருவையா என் உயிரற்ற சடலத்தை!
போய் வருகிறேன் என கூறிய உன்னை
பேய் காற்று கொண்டு போனதா!
இல்லை பொருள் ஈட்ட சென்ற நீ
பரத்தையின் பாசம் கொண்ட காதலனாகி போனாயா!
உன்னை நிமிர்ந்து பார்க்கும் வரை
கன்னி எண்ணியதில்லை ஆண்மகன் ஒருவனை கூட!
இருப்பினும்!
உந்தன் மார்பினை தழுவிய என் பொண் உடலை
இனி தீண்டுவது ஈமை தீயில் எண்ணெயும் விறகும்...
என்னை விட்டு பிரிந்து நீ சென்ற நாள்
இன்றோடு முடிகிறது முழு ஆண்டாக!
கரு வண்டோ என வண்ண மலர்கள்
அஞ்சிய இந்த வாஞ்சியின் கண்கள் வாடியது கரு வலையத்தால்!
மெய் மறக்கும் தேனீக்கள் கருங்கூந்தலை தழுவும்
நாள் கடந்து இன்று செல்லரிக்கும் கழைத்தோட்டமாக குழல் கொண்டேன்!
இறுதியாகக் கூறுகிறேன் ஒன்றே ஒன்று
விரைவாக வந்து சேர்
மெதுவாக பிரிகிறது என் உயிர்