கூடல்

தெருவோடொரு எழில்பூமழை தரவேவரம் பெற்று
-திருத்தேரினில் சிலைபோlலருள் தரும்தேவதை போன்ற
உருவானவள் இமையோரமாய் உறவாடிட வென்று
=உயிரோடிரு கருமீன்களை உயர்வானதாய் வைத்து
ஒருபார்வையில் அடியோடவள் உயிர்வேரினை சாய்க்க
-உடலாவியை உனக்கேயென உதிர்த்தேனவள் கண்ணில்.
விருப்போடொரு சிறுபூநகை விதைத்தேயவள் செல்ல
-விரித்தேன்மனச் சிறகாதனை விரைந்தேமணம் கொள்ள.

இதழ்மீதொரு கனித்தேன்நதி எனக்காய்தினம் பாயும்
-இளமானினம் அவள்மேனியில் இளைப்பாறிய கோலம்
நுதல்மீதினில் அழகாய்விரல் நுனிதீட்டிடின் திலகம்
-நுசுப்போரமாய் இசைப்பாடிட நுழைவாயிலை காட்டும்
முதல்மாமழை தனிலேமனம் முழுதாய்நனைந் திடவும்
=முகிலானவள் கரம்சேர்ந்திடும் மணவாழ்வினை நெஞ்சம்
நிதந்தேடிடும் நினைவானது நிழல்போல்வர நாளும்
=நிறம்சூடிய அழகோவிய நிசம்மீதினில் துஞ்சும்.

தமிழோடிசைத் துணையாகிடத் தரமாகிடும் பாடல்
=தனைக்கேட்டிட வரம்கேட்பவர் தவம்பூண்டிடும் தேடல்
அமிழ்தாகிய இளமானிடம் அடியேன்கொளும் ஊடல்
=அலையோடலை அழகாய்தினம் அலைமோதிடும் ஆடல்.
உமியோடுள விதையாகிய உளத்தோடுயிர் மூடல்
=உறங்காநிலை தரவேவரும் உறவாயெனை சூடல்
நிமிராதலை நிலம்பார்த்திட நடந்தேவர நாடல்
=நிலவானவள் ஒளிவீசிடும் மணவாழ்வினில் கூடல்!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (3-Oct-16, 2:29 am)
பார்வை : 211

மேலே