பெண்ணுக்கான விடுதலை
![](https://eluthu.com/images/loading.gif)
உண்மையில் பெண்ணுக்கான விடுதலை என்பது எது......?????
உண்மையான பெண் விடுதலை எதுவென்று தெரியாமலே பல பெண்கள் இன்னும் அதிகமாய் ஆண்களுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறார்கள்.....உண்மையான பெண் விடுதலை என்பது ஒரு பெண்ணை மிக சரியான பெண்ணாக தான் மாற்ற வேண்டுமே ஒழிய ஆணின் நகலாக அல்ல.ஆனால் இது தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது.
பெண்கள் ஆண்கள் போலே மாற விரும்புகின்றனர்.ஆண்கள் சிகரெட் குடித்தால் பெண்களும் போட்டி போட்டு குடிக்கிறார்கள்....ஆண் பேண்ட் போட்டால் பெண்ணும் போடுகிறாள்.ஆண் ஒரு விடயத்தை செய்தால் அதை பெண்ணும் செய்தாக வேண்டும் என்கிறாள்.இது பெண்மைக்கான அடையாளம் அல்ல.அவள் இதனால் இரண்டாம் தர ஆணாகவே மாற்றமடைகிறாள்.
இது விடுதலையல்ல.இது இன்னும் அதிக ஆழமான அடிமைத்தனம்.ஏன் இது அதிக ஆழமானது என்றால் முதல் அடிமைத்தனம் ஆண்களால் திணிக்கப்பட்டது.இந்த இரண்டாவது அடிமைத்தனம் பெண்கள் தாங்களே உருவாக்கிக்கொள்வது.விடுதலை என்ற பெயரில் பெண்கள் தங்களை தாங்களே அடிமைத்தனத்திற்குள் திணித்துக்கொள்ளும் வரை அதிலிருந்து வெளிவருவது என்பது சாத்தியமே இல்லை....
பெண் நிஜமாகவே பெண் ஆக வேண்டும்.ஒரு பெண்ணை சார்ந்தே நிறைய விடயங்கள் உள்ளன.ஆணை விட ஒரு பெண் மிகவும் முக்கியமானவள்.ஏனெனில் அவள் தான் ஆண்,பெண் இருவரையுமே தன் கருவில் சுமக்கிறாள்.ஆண்,பெண் இருவருக்கும் அவள் தான் தாய்.இருவரையுமே அவள் தான் ஊட்டி வளர்க்கின்றாள்.அவள் விஷமானால் அவள் பாலும் விஷமாகும்.அவள் குழந்தைகளை வளர்த்திடும் விதமும் விஷமாகிவிடும்.
பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் நிஜமாகவே ஆண் ஆக சுதந்திரம் என்றுமே கிடைக்காது.பெண்ணின் சுதந்திரம் ஆணின் சுதந்திரத்திற்கு மிகவும் அவசியம்.ஆணின் சுதந்திரத்தை விடவும் அடிப்படையானது அது.
பெண்கள் தாங்கள் விடுதலையை பெறுவதற்காக ஆணுக்கு போட்டியாக ஆணின் நகலாக மாற வேண்டிய அவசியமில்லை.பெண் தன் பெண்மைக்குரிய அடையாளத்தோடே போராட வேண்டும்...அதுவே உண்மையான பெண்மைக்கு அழகு.
இதை ஒரு பெண் படித்தால் இதில் கூறியுள்ளவற்றை எதிர்க்கவே செய்வாள்...ஏன் நானே ஒரு பெண்
நானே கூட எதிர் கேள்விகள் கேட்கவே வாய்ப்புண்டு..ஆனால் இதை ஆழமாக பார்த்தால் இதில் கூறப்பட்டுள்ளவை நூறு வீதம் உண்மையானவை.ஆணிற்கு சமமாக வேண்டும் என்று எண்ணிக்கொண்டு நாம் இன்னும் ஆணிற்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறோம்.நமெக்கென்று தனித்துவமான அடையாளங்கள் எவ்வளவோ உள்ளது.பெண்கள் நாம் நம் பெண்மையை இழக்காமல் நம் விடுதலைக்காய் போராடுவதே பெண்மைக்கு அழகு.அதுவே அவளின் சிறப்பு.
நீ யாரையாவது அடிமைப்படுத்தினால் நீயும் இறுதியில் அடிமையாகி தான் போவாய்.நீ சுதந்திரமாக இருக்க விரும்பினால் மற்றவர்களுக்கும் விடுதலையை கொடு.அது ஒன்று தான் நீ சுதந்திரமாய் இருப்பதற்கான ஒரே வழி.(இது ஆண் ,பெண் இருவருக்குமே பொருந்தும்..)
பெண்ணே...நீ விடுதலையை பெற வேண்டுமென்றால் ஆணாய் மாறாதே...உண்மையான மிக சிறந்த பெண்ணாக மாறு.அது உனக்கு மட்டுமல்ல உனை சார்ந்தவர்களுக்கும் பெற்று கொடுக்கும் விடுதலையை.....
ஓசோ அவர்களின் பெண்ணின் பெருமை எனும் நூலில் "பெண் விடுதலை" எனும் பகுதியினை வாசித்த போது எனக்குள் தோன்றியவையையும் அவரது கருத்துக்களையும் சேர்த்து இங்கு உங்களோடு பகிர்ந்துள்ளேன்.