கத்திச்சண்டை

சங்கரனுக்கு வீட்டில் மனைவியுடன் தர்க்கித்துக் கொண்ட சற்றும் தணியவில்லை. காலையில் அலுவகத்திற்கென்றுப் புறப்பட்டுப் போனவன் நேராக ஒரு கத்தி விற்பனை செய்யும் கடைக்குள் நுழைந்தான்.வகைவகையான கத்திகள் குவிக்கப்பட்டிருந்த அந்தக் கடையில், கைக்கடக்கமானதும் iமிகவும் பளபளப்பானதும் ,அதேவேளை வெட்டினால் கழுத்து ஒரே வெட்டில் இரண்டாகும் அளவிற்கு மிகவும் கூர்மையானதுமானக் கத்தியொன்றைக் கையில் எடுத்தான். கடைக்காரரிடம் விலையைக் கேட்டான் .கடைக்காரர் கூறியவிலை சற்று அதிகமானதாகவே இருந்தது. அது அந்தக் கடையின் அன்றையநாளின் முதல் வியாபாரம் என்பதால் பேரம் பேசாமல் கேட்ட விலையைக் கொடுத்து அதை வாங்கினான்.கடைக்காரிடம் கேட்டு வாங்கிய பழைய பத்திரிகையொன்றில் அதை சுற்றி மறைத்து.கைக்கடக்கமான ஒரு பையில் இட்டுக்கொண்டு அவசரஅவசரமாய் அலுவலகம் நடந்தான்.அவனுடைய அந்த நடை கடைக்காரரை எதோ செய்தது.
அலுவலகத்தில் நுழைந்தவன் கத்தியை
யாரும் பார்த்துவிடக் கூடாதென்று அலுவலகக் கைப்பைக்குள்ளே வைத்து மறைத்துவைத்துவிட்டு வேலையைத் தொடங்கினான்.கத்தியை யாராவது கண்டு விட்டால் அதை கொண்டுவந்ததிற்கான காரணத்தைச் சொல்லவேண்டும். அதை சொல்லப்போனால் காலையில் வீட்டில் மனைவியோடு சண்டைப் பிடித்ததை சொல்லவேண்டும். சொல்ல முடிந்தால் சொல்லலாம். வீட்டு விஷயத்தை சொல்லி அலுவலகத்தில் உள்ளவர்களை மனசங்கடப் படுத்தக்கூடாது. அதைவிட கத்தியை மறைத்து வைத்துவிட்டால் பிரைச்சினை இல்லை. மறைத்தவாறு இடையிடையே கத்திமேல் ஒரு கண்ணோடு அன்றைய பணியில் மும்முரமானான். மாலை ஐந்து மணிக்கு அலுவகம் முடிந்ததும் கத்தியைத் தூக்கிக் கொண்டு வெளியேறினான். மனதுக்குள் மனைவியின் ஞாபகம் வந்தது. இன்றைக்கு இந்தக் கத்தியால் அவளுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும்.எண்ணிக்கொண்டு பஸ் தருப்பை நோக்கி விரைந்தான். அவனுக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் முடிந்து ஆறு மாதங்களே ஆகின்றது.இந்த ஆறு மாத காலத்துக்குள் எந்த சண்டைச் சச்சரவும் வந்ததில்லை.இரண்டு வாரங்களுக்கு முன்னர் சங்கரனின் அலுவலகத்தில் அவனுக்குத் திடீர் மாற்றல் கொடுத்துவிட்டார்கள்.இந்த புதிய ஊருக்குள் காலடி வைத்த நாள் தொட்டே சின்னச்சின்னதாய் சில பிரச்சினைகள் எழ ஆரம்பித்தன. புதிய ஊர். புதிய சூழ்நிலை. அறிமுகம் இல்லாத அண்டை அயலவர்கள். வீட்டை விட்டு வெளியே போய் பழக்கமில்லாத சங்கீதாவிற்கு யாருமில்லாத தீவில் தனித்து விட்டவளாய் தவித்துக் கிடக்கும் வெறுமை வாட்டி வதைத்தது. எல்லாம் போகப்போக சரியாகிவிடும் என்றே கணவனுக்குத் தொல்லைக் கொடுக்காமல் சமாளித்து வந்தாள். என்னதான் சமாளித்து வந்தாலும் சில சந்தர்ப்பங்கள் சண்டைக்கு வழி வகுத்துவிடுகின்றன. அதற்கு உதாரணம்தான் இன்று காலை நடந்த சண்டை.
பஸ்ஸில் இருந்து இறங்கியதும் கத்தியை எடுத்துக் கையில் வைத்தவாறே வீட்டை நோக்கி நடந்தான்.இவன் வருவான் என்றுக் காத்திருந்த சங்கீதாவும் சன்னலினூடாக இவன் வருவதைக் கண்டவளாய் வாசல் கதவைத் திறந்து வைத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள் அடுத்த சில நிமிடங்களில் வீட்டினுள் காலடி எடுத்து வைத்த சங்கரன் 'சங்கீதா.. ஏய் சங்கீதமா,,' சத்தமிட்டான். சத்தமிட்டுக்கொண்டேகத்தி சுற்றியிருந்த பத்திரிகையை எடுத்து வீசிவிட்டு.சமையலறைக்குள் நுழைந்து அவளுக்கு முன்பாகக் கத்தியை நீட்டினான், பளபளவென்றிந்தக் கத்தியைக் கண்டு அதிர்ந்தவள் "ஆ... கத்தி நல்லா இருக்கே இதுபோதும் இதிலே கோழி மீன் எல்லாம் கூட இதிலே.. வெட்டிக்குவேன். சரி உடுப்பை மாத்திட்டு குளிச்சிட்டு வாங்க நான் தேநீர் கொண்டு வாறன்,' ' நீ தேநீர் ஊற்றுவது இருக்கட்டும். இனிமேல் கத்தி இல்ல அது இல்ல மீன் சாப்பிடணுமென்றால் மீன்காரனைத்தான் கட்டி இருக்கணும்போல அப்படி இப்படின்னு தேவை இல்லாத பேச்சு பேச வேண்டாம்.அதுவும் காலங்காத்தால வேலைக்குப் போகும்போது .இத்தோடு இந்த மாதிரி பேசுறத விட்டிரு ' சத்தமிட்டான். 'நான் வேண்டுமென்றா அப்படி பேசினேன் .கத்தி இல்ல கத்தி இல்ல என்று எத்தனைத் தடவைக் காத்திக் கத்தி சொல்லியிருப்பேன்.நீங்க காதிலே வாங்கினாத்தானே.' சற்றே உரக்கப்பேசிய சங்கீதாவை பார்த்து சரி அதுக்கு என் மறுபடியும் இப்படி பெரிசா கத்தி சண்டைப் பிடிக்கிற,அக்கம் பக்கம் இருக்கிறவங்க பார்த்தா கேவலமாகிவிடும்.' கத்திக்காக நான் நம்ம வீட்டுக்குள்ள கத்திக்கேட்கிறதிலே என்னங்க கேவலம். இதுக்கெல்லாம் மௌன யுத்தமா புரிய முடியும்.?' பதிலுக்குப் பேசியவளிடம் உன்னோடு பேசி வெல்ல இயலாதும்மா.சரி சரி இத்தோடு நிறுத்திக்குவோம் இந்தக் கத்தி சண்டையை' என்றவாறு அவளின் பதிலுக்கு காத்திராமல்.அவ்விடத்தை விட்டகன்றான்.கத்திக்கான சண்டைக்கு முற்றுப்புள்ளியை மௌனத்தில் வைத்தவனாய் .

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Oct-16, 1:22 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 266

மேலே