ஞாயிற்றுக்கிழமை

விடுமுறையின் கழுத்தில்
எங்கள் முதலாளிமார்
கத்திவைக்கும்
பலி நாள் .

ஆறு நரகத்தின்
பின்னர் தோன்றும்
ஆனந்த சொர்க்கம்.

வசந்தங்கள் முளைக்கின்ற
வாராந்த இளவேனில்.

தொழில் சுரங்கத்துக்குள்
புதைந்துபோகும்.
எழில் நிலாக்கள்
தோண்டி எடுக்கும்
மாணிக்கம் .

அம்மாவுக்குப் பொய்ச்சொல்லி
அப்பாவுக்கு கண்ணில்
மிளகாய்த் தூவி
அண்ணனுக்கு சிகரெட்
இலஞ்சம் கொடுத்து,
தங்கையின் ஓட்டை வாய்க்கு மட்டும்
காரணம் சொல்ல
வார்த்தைகள் தேடித் தடுமாறி
நல்ல காதலியைக்
கள்ளத்தனமாகச்
சந்திக்க ஓடும்
நந்தவன நாள்.

ஒவ்வொரு திங்கட்கிழமையின்
தொடக்கத்திலேயே
அடுத்தது எப்போது
வருமென்று தவமிருக்கச்
செய்கின்ற ஒரு
பொக்கிஷ நாள்தான் என்றாலும்
எமக்கெல்லாம் விடுமுறை வழங்கி
ஆனந்தமூட்டும் ஞாயிறே நீ
உனக்கான விடுமுறையை
எடுக்கும் நாள் எதுவோ?

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Oct-16, 4:22 pm)
பார்வை : 370

மேலே