மெதுவாக ஒட்டிக் கொண்ட திறமை

12/26/2005 By டோண்டு ராகவன்

போன வருடம் என் பொறியியல் கல்லூரி நண்பனைப் பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தேன், தொலைபேசியில். பேச்சுவாக்கில் அவன் தன்னுடைய அப்போதைய போஸ்டிங்கில் 2000 ஆண்டு ஜனவரி-2 அன்று சேர்ந்ததாகக் கூற, உடனேயே நான் "என்னடா உளறுகிறாய், அன்று ஞாயிற்றுக் கிழமை அல்லவா என்று கூற, "டேய் இன்னும் நீ அந்த வேலையை விடவில்லையா" என்று என்னைக் கலாய்த்தான்.

அது என்ன வேலை? சாதாரணமாக என்னிடம் தேதியைக் குறிப்பிட்டால் அது என்னக் கிழமை என்பதைக் கூற என்னால் முடியும். அதற்கென்று ஒரு ஃபார்முலா இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அது என்னவென்று எனக்குத் தெரியாது, தெரிந்து கொள்ளும் ஆசையுமில்லை. எப்போதும் நான் first principles-லிருந்தே இந்தக் கணக்கைப் போட விரும்புவேன். அந்தத் திறமை என்னிடம் என்னை அறியாமலேயே குடி புகுந்தது.

இதெல்லாம் ஆரம்பித்தத் தருணம் மட்டும் ஞாபகம் இருக்கிறது.

வருடம் 1968, நவம்பர் மாதம். நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. ஐந்தாம் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு மழை நிறைந்த பகல் வேளையில் லைப்ரரியில் புத்தகங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். மேஜை மேல் கல்லூரியின் பழைய ஆண்டு விழா மலர்கள் இருந்தன. புரட்டிப் பார்த்தேன். 1912-ஆம் வருட மலர் கிடைத்தது. என் தந்தை பிறந்த வருடம். அதைப் புரட்டிப் பார்த்தேன். நவம்பர் 1912-ல் நடந்த சில நிகழ்ச்சிகளைப் போட்டிருந்தார்கள். எதேச்சையாகக் கிழமையைப் பார்த்தால் ஒரு குறிப்பிட்டத் தேதியின் கிழமை 1968- ஆம் வருடத்துக்கான அதே தேதியுடன் ஒத்துப் போயிற்று. இரண்டுமே லீப் வருடங்கள். ஆக 1912 மற்றும் 1968 வருடங்கள் காலெண்டர் ஒன்றே. இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளி 56 வருடங்கள். இங்கு என் மனதில் ஒரு ஜம்ப் நடந்தது. அதாவது 56-க்கு காரணிகள் 7,4 மற்றும் 2. இதில் 7 என்பதை ஏழு கிழமைக்கு வைத்துக் கொள்ளலாம், 4 என்பது லீப் வருட இடைவெளிக்கு வைத்துக் கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றியது. சரி, 2? உடனே 56-ஐ 2-ஆல் வகுத்துப் பார்க்க, 28 கிடைத்தது.

உடனே 1940 வருட ஆண்டு விழா மலரைப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்? அதுவும் 1968-ன் கிழமைகளையே கொண்டிருந்தது. சரி, 14 வருட இடைவெளி? நோ சான்ஸ், ஏனெனில் 1954 லீப் வருடம் அல்ல. அந்த வருடத்துக் காலெண்டரை தேடக்கூட இல்லை. ஆக அன்று நான் கற்றுக் கொண்டது, 28 வருடங்களுக்கொரு முறை கிழமைகள் அப்படியே ரிபீட்டு என்று வரும்.

மேலே நடந்த நிகழ்ச்சிகளுக்கு சில மாதங்களுக்குப் பின்னால் ஒரு ஆங்கில நாவல் படித்து கொண்டிருந்தேன். அதில் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 20, 1966 என்று இருந்தது. உடனே எனக்கு தோன்றியது, அடேடே, 1960 நவம்பர் 20 கூட ஞாயிறுதானே என்று. அந்தத் தேதி சென்னையில் பெரும் புயல், ஆகவே நன்றாக நினைவு இருந்தது. இதில் 1960 லீப் வருடம் ஆனால் 1966 லீப் வருடம் அல்ல. ஆகவே இந்த ஒற்றுமை மார்ச் முதல் தேதியன்றுதான் அமுலுக்கு வரும். இந்த மாதிரி என்னென்ன வருடங்கள் வருகின்றன என்று இன்னும் சில நாட்கள் கழித்து யோசித்து பார்த்தேன்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் ஆசிரியர் ரங்கா ராவ் அவர்கள் சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அதாவது, ஒரு வருடத்தில் குறிப்பிட்டத் தேதியில் ஞாயிறு என்று வைத்துக் கொண்டால் அடுத்த வருடத்தில் அதே தேதியின் கிழமை திங்களாக வரும், நடுவில் பிப்ரவரி 29 வராத பட்சத்தில். அவ்வாறு வந்தால் அது செவ்வாயாக வரும். இதை வைத்து 1940-லிருந்து சோதித்து பார்த்தேன். லீப் வருடத் தொல்லையைக் குறைக்க மார்ச் மாதத்திலிருந்து பார்க்க ஆரம்பித்தேன்.

அதில் எனக்கு கிடைத்த ரிஸல்ட் இதோ. 1940, 1946, 1957 மற்றும் 1968 ஆண்டுகளில் கிழமைகள் மார்ச் 1-முதல் கிழமைகள் ரிபீட்டு ஆகும். அதாவது லீப் வருடம் 6 ஆண்டுகளுக்கு பிறகு, லீப்+1 வருடம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, லீப்+2 வருடம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, மற்றும் லீப்+3 வருடம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கிழமைகள் திரும்ப வரும். மார்ச் 1-ஆம் தேதிக்குப் பிறகுதான் நான் இங்கே கூறியது பொருந்தும் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

என் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள் தேதி மற்றும் கிழமையுடன் எனக்கு ஞாபகம் இருக்கும். அதை வைத்து மற்றவர்கள் ஏதாவது தேதி சொல்லும் போது கிழமையைக் கூற ஆரம்பித்தேன். பலர் ஆச்சரியப்பட்டனர், சிலர் எனக்கு ஜோஸ்யம் தெரியும் என்று கூட நினைத்து விட்டனர். ஒரு 19 வயது ஃபிகர் தன் கையை நீட்ட அவளிடம் உண்மை கூற மனமில்லாது கையை சிறிது நேரம் பிடித்துப் பார்த்து (மெத்து மெத்தென்று இருந்தது, கையைத்தான் கூறுகிறேன் ஐயா) பாவ்லா காட்டியதை இந்த நேரத்தில் மறந்து விடுவோம்.

பிறகு ஒரு காலண்டர் வருடத்தில் கிழமைகளின் வரிசையை ஆராய்ந்தேன். லீப் ஆண்டுகள் இல்லாத போது, பிப்ரவரி-மார்ச்-நவம்பர், ஏப்ரல்-ஜூலை, செப்டம்பர்-திசம்பர் மாதக் கிழமைகள் ஒன்றாக இருக்கும். லீப் வருடங்களில் பிப்ரவரி ஆட்டத்தை விட்டு அகலும், ஆனால் ஜனவரி-ஏப்ரல்-ஜூலை கிழமைகள் ரிபீட்டு ஆகும்.

பல ஆண்டுகளாக ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் கடுப்படித்த வண்ணம் இருந்தன. ஒரு நாள் திடீரென ஞானோதயம் வந்தது. இந்த ஆண்டு மே மாதம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் ஒத்துப் போகும். அதே போல இந்த ஜூன் அடுத்த பிப்ரவரியுடன் ஒத்துப் போகும். அதற்காக அடுத்த பிப்ரவரி 30 இந்த ஜூன் 30 கிழமைகள் ஒன்றா என்றெல்லாம் கேட்டு வெறுப்பேத்தக் கூடாது. நான் செய்வதெல்லாம் இருந்ததை இருந்தபடி ஆனால் சற்று வரிசைப்படுத்திக் கூறுவதேயாகும்.

இன்னொரு விஷ்யம், வருடத்து 364 நாள் என்றிருந்தால் மேலே கூறியத் தொல்லைகள் ஒன்றும் கிடையாது. ஒரே காலண்டர் அத்தனை ஆண்டுகளுக்கும் வரும். ஆனால் என்ன, அவ்வாறு செய்தால் வேறு தொல்லைகள் வரும். சில நூற்றாண்டுகளுக்குப் பின்னால் கிறிஸ்துமஸ் கடும் கோடையில் வரும். இப்போதே அப்படித்தான் என்று துளசி அவர்கள் கடுப்படிக்கக் கூடாது. நீங்கள் இருப்பது பூமத்திய ரேகைக்குக் கீழே. இது வேறு ஆட்டம்.

என் விஷயத்துக்கு மறுபடியும் வருவோம். நான் சாதாரணமாக கிழமையைக் கூற சில நிமிடங்கள் ஆகும். கூறப்பட்டத் தேதிக்கு மிக அருகில் உள்ள தேதியில் என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஏதாவது இருந்தால் அதிலிலிருந்து வொர்க் அவுட் செய்வேன். ஒருவர் 1964 ஜனவரி முதல் தேதிக்கானக் கிழமையைக் கேட்க, அவரிடம் புதன் என்று கூற, எப்படி கண்டு பிடித்தீர்கள் என்று கேட்க, அவரிடம் ஏப்ரல் முதல் தேதி 1957 ஆம் வருடம் திங்கள், அதிலிருந்து கண்டுபிடித்தேன் என்று கூறி விடுவேன். ஆகவே நேரம் பிடிக்கும். அதே நேரத்தில் என் வாழ்வில் நடந்த அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை அசைபோடவும் நேரம் கிடைக்கும். அதனால்தான் நான் என் பதிவுகளில் சமீபத்தில் 1955 வருடத்தில் என்றெல்லாம் எழுத முடிகிறது.

உதாரணமாக, மேலே குறிப்பிட்ட 1957, ஏப்ரல் 1-ஆம் தேதி நயா பைசா அமுலுக்கு வந்தது, அதன் சம்பந்தப்பட்ட நினைவுகள், அன்று என் வாத்தியார் கே. ராமஸ்வாமி அய்யர் அவரிடம் உதை வாங்கியது, நான் மட்டும் உதை வாங்குவானேன் என்ற நல்லெண்ணத்தில் என் நண்பன் டி.வி. ரங்காச்சாரியையும் போட்டுக் கொடுத்தது எல்லாம் ஞாபகம் வரும். மறுபடியும் என் வயது 11 ஆகி விடும். அம்புடுத்தேன்.

போன ஆண்டு என்னிடம் ஒருவர் மே 27, 1964 என்னக் கிழமை என்று கேட்டு வாயை மூடும் முன்னாலேயே, புதன் என்று கூறினேன். நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் நேரம் கூட எடுக்காததைக் கண்டு வியப்படைந்த அவர் காரணம் கேட்க, அன்று நேரு அவர்கள் இறந்த நாள் என்று கூறினேன். தானும் அதை வைத்துத்தான் கேட்டதாகக் கூறி விட்டு அவர் நடையைக் கட்டினார்.

எழுதியவர் : டோண்டு ராகவன் (16-Oct-16, 7:54 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 270

மேலே