ஆத்மாவாகிய நான்

விடியலில் மடிந்தயெனை கடிந்தநீ காணவியலாது உன்னில்
படிந்துகொண்ட கர்வத்தினால் எனை கண்டிடமறுக்கிறாயா...?

கார்முகில் மறைத்த செங்கதிரவனாய்
காகிதங்களிடை புகுந்த மயில்பீலியாய்...

இலைமறை தலைகாட்டும் விலையற்ற முல்லைமலராய்
தலைமறைந்து தனிமையில்நீ எனையா நினைத்துக்கொண்டிருக்கிறாய்...?

சென்றவன் என்ன செலவழித்துநம்மை செம்மையாக்கிவிட்டா சென்றான்...?
சொல்லிடைச் செறுக்கில் மதியிழந்து விதிதுறந்துதானே சென்றானென நினைக்கிறாயா...?

ஏட்டிலெழுதி எண்ணிப்பார் ஒருமுறை
எண்களில் அடங்காத என்காதல் வகுக்கும் உனக்கான வாழ்வதன் வழிமுறை...

தேரோடும்வீதியில் உனைத்தேடிப் போராடி
உயிர்நீத்த உறவான என்சடலத்தை
ஒருமுறையேனும்...

உன்மடி கிடத்தி மார்போடு அணைத்து
ஒருதுளி கண்ணீரையாவது என்காதலுக்கு காணிக்கையாக்கிடத் தோன்றவில்லையா...?

கண்களின் மணிகளாய் காத்த உன்னவனை
கரையான் அரிக்க காத்துக்கிடப்பதை நீயெங்கும் காணவில்லையா...?

மண்ணுக்குள் உன்னால்மலர்ந்த நம்காதல்தனை நான் விண்ணுக்குக் கொண்டுசெல்ல
மனதிற்குள் மதிமயங்கி வீழ்ந்ததுநானென இப்போதும்நீ உணரவில்லையா...?

உடல்பிரிந்த எனதுயிர் உன்நினைவுகளைச் சுற்றியே வட்டமிட
அரிதாரமற்ற ஆத்மாவான என்சிந்தைக்குளெல்லாம் சிதறிக்கிடக்கிறது நம்காதல்...

எப்படிச் செல்வேன்...?

காற்றில் கலந்தநான் ஒருமுறையேனும் உனைக்காண
காலனவன் கைப்பிடியிலிருந்து தப்பிவிட தவிக்கின்றேன்...

காலம் எனக்குக் காலாவதியாகிவிட
கோலமயில் உன்மேல் கோபம்கொள்வதும் சாபம்சொல்வதும் தவறுதான்...

செல்கிறேன் பெண்ணே...!
செப்பனிடப்படாத நம்காதலையும் சுமந்துகொண்டு...

#ஆத்மாவாகிய_நான்

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (25-Oct-16, 8:09 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 133

மேலே