தீபாவளி - உள்ளும் புறமும்

நெடுநாள்முன்
நினைவில் நின்ற
அந்த சில தீபாவளிகள்
இன்றும் நெஞ்சுக்குள்
ஏங்கும் நிஜங்கள்...

அந்த நிஜங்களின்
நிழல்களாவாவது
இன்று இந்த தீபாவளி
வந்து விடக்கூடாதா என்றே
ஏங்கும் கண்கள்....

அகக்கண்ணும் மனக்கண்ணும்
விரும்பினாலும் இல்லாவிட்டாலும்
நிஜக்கண்ணிலும் நெஞ்சுக்குள்ளும்
நிலைக்க முடியாதது இந்த தீபாவளி...!

வசதிகள் பெருகி வசந்தத்தில் நின்றுகொண்டு
காசை கருக்கி வண்ணங்களில் நெளிந்து
இனிப்பு சேராது என்று கையை குறுக்கி...

ம்ஹூம். இதுவா தீபாவளி.
வாடிய வதனங்களில் வடியும் வாட்டத்தை போக்கிட
வகையில்லாத நாட்கள் இங்கு தேதியாய் கிழிய கழிய..

நினைவுகளில் வாழ்ந்திடத்தான் துடிக்கிறது,
நிஜத்தில் நிதம் ஏங்கியே தவிக்கிறது,
இரும்புக்கோட்டையாய் இருந்த கூட்டுக்குடும்பம்
கரும்புக்கோட்டையாய் இருந்ததை எண்ணியும்,
இன்று
பிரிந்து நின்று சிதறிக்கொண்டு உழன்றுகொண்டு
துரும்பாய் சிலரும் துடுப்பாய் ஒரு சிலரும்

சரவெடிகளாய் இருந்தவர்கள் நாங்கள்
பொருமுகிறோம் புஷ்வானமாய்
பெருசுகள் அவ்வப்போது ஊசிப்பட்டாசாய்,
சிறார்கள் மட்டும் இங்கே மத்தாப்பாய் உள்ளும் புறமும் -
அவர்களுக்காகத்தானே நாமும்...

எழுதியவர் : செல்வமணி (28-Oct-16, 9:42 am)
பார்வை : 76

மேலே