சம்மதம் சொல்வாயா……

சம்மதம் சொல்வாயா……
’’’’’’’’’’’’’’=====’’’’’’’’’’’’’’’’’’’
சம்மதம் சொல்வாயா என் சங்குவிழி தேவதையே
சந்துவழி நடந்துவந்து என் அங்கம் நுழைந்தவளே
தாகம் எடுத்ததென தண்ணீர் கேட்டதற்கோ –உன்
கோபம் சொன்னதடி என் தேகம் இல்லையென

பூவில் இருக்கும் அந்த பூநாகம் உன்சொல்லோ
சாவை கொடுக்குதடி இந்த பூவை இல்லையென
நாவில் இருக்கும் அந்த கடுஞ்சொல்லை நீக்கிவிட்டு
பூவைநீ காட்டிடடி பொலிவான உன் முகத்தை

நாளும் நினைத்திருந்து நல்தேகம் இளைத்துவிட்டேன்
வானின் பொன்நிலவு வந்திறங்கும் கையிலென
தாவணி என்நிலவே தண்ணீர் குடத்துடனே –என் மனையில்
ஆவணி மாதமதில் அடியெடுத்து வைப்பாயோ

காதில் ஒலிக்கிறதோ என் காதல் வலிமொழிகள்
பாதி இறந்துவிட்டேன் என் நாதி நீயெனவே
மீதி உயிரதையோ மீட்டிடடி என்னவளே –வெறும்
சாதி கதைதள்ளி சம்மதம் உள்ளதென

வேடம் களைவாயா வெண்மதியே என்விதியே
கூடல் கொடுத்திடடி என் குறையுள்ளம் நிறைவதற்கே
பாடல் புரிந்ததென நீ சூசகமாய் சொல்லிடுவாய் -இந்த
பாடகனின் மனம்குளிர உன் சாகச பார்வையிலே

* * * *
நித்தம் வழிநின்று விழிநோக்கும் கண்ணாளா
சத்தம் ஏதுமின்றி கண் யுத்தம் செய்பவனே
வித்தை பலநூறு உன் விழிகளுக்கு தெரியுமெனில் –என்
ரத்த நாளமெல்லாம் யார் நினைவோ நீ கூறு

நாணம் கொண்டவளை கோபம் வென்றிடுமோ
தாகம் உள்ளதென பெரும் வியூகம் வகுப்பவனை –பொய்
வேகம் கொண்டவளாய் விழித்தேன் நன்றே –உன்
மோக எண்ணமதை நான் முறித்தேன் அன்றே..

மாகோலம் நானிடுவேன் அதில் மதிநுட்பம் சேர்த்திடுவேன்
மணக்கோலம் மாதமதை மறைவாக மொழிந்திடுவேன் –அது
ஆவணி மாதமதோ ஆராயும் திறனுண்டோ –அன்றி
பங்குனி மாதமதோ பகுத்தறியும் திறனுண்டோ? கண்டறிவீர்

கள்ள விழியவனே எனை அள்ள நினைத்துருகி –உன்னுடல்
பள்ளம் ஆனதென என் உள்ளம் சொல்லியதே
உள்ள உரையதுவோ முள்ளென குத்துகையில் –நான்
அள்ளி அணைப்பேனா உனை தள்ளி விடுவேனா

வேடம் தரிக்கவில்லை விலக நினைக்கவில்லை
கூட நினைத்துருகி நான் வாடி கிடக்கின்றேன்
பாடி பிளைப்பவரே உடல் வாடிக் கிடப்பவரே –நான்
சூடி இருக்கின்றேன் உன் நினைவை மல்லிகையாய்

கே.செந்தில்குமார்

எழுதியவர் : கே.செந்தில்குமார் (31-Oct-16, 10:17 pm)
பார்வை : 131

மேலே