இரவும் நானும்

இரவு...
உணர்விற்கான வேளையிது
உறவுக்கான நேரமிது
உடல்கள் உடலோடும்
உடல்கள் ஓய்வோடும்
உயிர்கள் வலியோடும்
விழிகள் நீரோடும்
மனங்கள் கனவோடும்
கைக்குலுக்குமொரு
சுதந்திர பொழுதிது!
இரவை நீங்கள் அலுப்பு நீக்கயென்கிறீர்கள்
நானோ அர்த்தப்படுத்த
என்கிறேன்...
இருளில் கசியும்
இறப்பு தேதியே
என் இன்றின் நிமிடங்களை
அர்த்தம் செய்கிறது!
இரவை நீங்கள்
துயரச் சாயலென்கிறீர்கள்.
நானோ சமத்துவ
சாரமென்கிறேன்...
பறப்பன,தவழ்வன,
அசைவன, நட்சத்திரம்,
பூமி,நிலவெனும் எந்த
பேதமும்
இரவின் மடியிலில்லை!
இரவை நீங்கள்
அர்த்த ஜாமமென்கிறீர்கள்.
நானோ அந்தரங்க
சாளரமென்கிறேன்...
இரைந்துரைத்தால்
இழுக்காகும்
இதயத்தின் இச்சைகளை
இதன் இரகசிய
பக்கங்களில்தான் என்னால்
போக்கெழுத முடிகிறது!
விளக்கின் துணையின்றி
உங்களால்
இரவுடன் இல்லறம் நடத்த முடிவதில்லை!
இரவோ
தன் சுயமழிக்கும்
எதனோடும் உறவாட விழைவதில்லை!
இரவை சுவைத்த விழிகளென்றும்
பகலை சுகிப்பதில்லை!
இரவை நீங்கள்
பேயுலவும்
சாமமென்கிறீர்கள்
நானோ நோயகற்றும்
யாகமென்கிறேன்...
உலகின் போக்கில்
ஓடிடும் எண்ணங்களை
சிந்தனை சிறையெடுக்க
இக்கணமே இயலுகிறது!
இரவை நீங்கள்
கலவிக்கான
நேரமென்கிறீர்கள்
நானோ கல்விக்கான
சோலையென்கிறேன்...
புறத்தொடர்பறுத்திடும்
பொற்சாவி
இதனிடம்தான் இருக்கிறது ...
இரவின் தேடல்களில் மனம்
மனித செயற்கைக்குள்
சஞ்சலப்படுவதில்லை!
பகலின் சிணுங்களைவிட
இரவின் அழுகைகள்
சுகமானவை!
இருள் யாருள்ளும்
தான் சங்கமிப்பதை
விரும்புவதில்லை...
உலகை தன்னுள்
ஐக்கியப்படுத்தவே
விழைகிறது!
இரவின் ஈர மொழிகளை
உணர முடிந்தவனுக்கு
இந்த
பூமி,நிலவு,வானம் விண்மீன் யாவும் ஒன்றே!
ஈரேழு லோகமும்
இருளின் சுவடுகளே!
வெளிச்சம் நுழைந்திடா
கிரகங்களுள்ளும் இருளே
வியாபித்துள்ளது!
இரவே பெரிது!
இருளே வலிது!
உயிர்களின்
துவக்கமும் முடிவும்
யாவுமிருளே!
தற்காலிக
விளக்குகளை நம்பி
நித்திய இருளை
கைவிடாதீர்!
உன்னுள் புதைந்த
உனக்கே தெரியா
உன்னைக் காட்டும்
ஞானக் கண்ணாடி
இருளின்
கரங்களிதானுள்ளது!
நீங்கள் இரசிக்கும்
பகலின் பூபாளம்
வெய்யோன் கதிர்
கண்டு வெதும்பும்
பூமியின் புலம்பலே!
உங்களின் சராசரி
புலன்கள் நுகர முடியா
இரவின் புல்லரிப்பில்தான்
பூமி புதுப்பித்து
கொள்கிறது
தன் பருவக்கால பூரிப்பை!
இரவொரு தவம்!
அதை நோற்க
தெரியாவரையில்
இணையவே முடியாது
இயற்கையும்-நீயும்!
"பகலினில் ஆட்டம்
இரவினில் தூக்க"மெனும்
சீர்க்கெட்ட சித்தாந்தத்திருந்து
இப்படியாய்
முரண்படுகிறோம்
இரவும்-நானும்!!