ஈழம் காத்திடுவோம்
புத்தனை பூஜிக்கும்
மண்ணுக்கு நித்தம்
தமிழனின் ரத்தத்தால்
அபிஸேகம் !
வாடிய பயிருக்காகவெல்லாம்
வாடியவன் வம்சம்
பதுங்கு குழியில்
பட்டினியாய் !
தமிழ் மறக்கற்பு
கடை விரிக்கப்பட்டுள்ளது
சிங்கள ராணுவத்திற்கு !
குண்டு மழை பொழிந்து
குழந்தைகள் உயிர்
குடித்தவகுடித்தவனோடு
குளிரூட்டப்பட்ட அறையில்
பேச்சுவார்த்தை !
உலக நாடுகள்
கபட நாடகம் !
ஐ.நா. சபை அது
ஆதிக்க நாடுகளின்
அடியாள் !
அப்பாவி தமிழனை
அடியோடு ஒழித்துவிட்டு,
எஞ்சியவரை அகதியாய்
அலையவிட்டு,
பிணக்குவியலின்
மேல்தான் நடக்கும்
பேச்சுவார்த்தை !
தாய்த்(தமிழ்)நாடு !
அது இன்னும் கொடுமை !
வலைவீசி மீன் பிடிப்பவரை
தூண்டில் மீனாய்
துடிக்க,துடிக்க
தூக்கிச் செல்லும்
சிங்கள ராணுவம் !
அதை கைகட்டி
வேடிக்கை பார்க்கும்
கையாலாகாத அரசாங்கம் !
சகோதரனை சிறைபிடித்தவனை
சகல மரியாதைகளுடன்
பேச்சுவார்த்தைக்கு
அழைப்பார்கள்
மாண்புமிகு அமைச்சர்கள்!
இருந்த இடத்திலிருந்தே
ஈழத்தமிழருக்காக
கடிதம் மட்டுமே எழுதுவர்
இன்னும் சிலர் !
ஆனால் ஈழத்தமிழனின்
உயிர் குடிக்கும் கத்தி
இங்குதான்
கூர்தீட்டப்படுகிறது !
ஆம் ! சிங்களப்படைக்கு
சகல வசதிகளுடன்
இங்குதான் பயிற்சியளிக்கப்பட்டது !
கட்டபொம்மன்களை
கட்டிக்கொடுத்த
எட்டப்பன்களின்
பரம்பரை இன்னமும்
இங்கே எஞ்சியிருக்கிறது !
முதலில் அவர்களை
களையெடுப்போம் !
பிறகு எதிரியின்
திமிரடக்கி ஈழத்தை
புதிதாய் புணரமைப்போம் !
இல்லையேல் தமிழா
ஈழத்தமிழினம்
மட்டுமல்ல விரைவில்
உலகத் தமிழினமே
அழிந்து போகும் !
புறப்படு களம் காண !
நாளைய விடியல்
நமதாயிருக்கட்டும் !
நம் தலைமுறையாவது
தலை நிமிரட்டும் ......!