கர்னாடகத்தில் தமிழ் - கவிஞர் இரா இரவி

கர்னாடகத்தில் தமிழ் !
கவிஞர் இரா. இரவி !
கர்னாடகத்தில் தமிழ் வாழ்கின்றது என்பது உண்மை. கர்னாடகத்தில் வாழும் தமிழர்கள் தமிழ்ப்பற்றுடன் உள்ளார்கள். ஈழத்தமிழர்கள் போல புதுவைத் தமிழர்கள் போல, நல்ல தமிழில் பேசி வருகின்றனர். தமிங்கிலம் பேசுவது இல்லை. புலம்பெயர்ந்து வாழும் பொழுது தாய்மொழிப்பற்று அதிகமாகி விடும் என்பது உண்மை.
இங்கு பல்வேறு தமிழ்ச்சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்து வருகின்றனர். குறிப்பாக பெங்களூர், மைசூர் போன்ற நகரங்களில் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றனர். பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் மிக புகழ்வாய்ந்த சங்கம். சமீபத்தில் தேர்தல் நடந்து முதலில் இருந்த தலைவர் ஜி.கே. தாமோதரன் திரும்பவும் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். துணைத்தலைவராக கோ. தாமோதரன் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னையில் கவிஞர் பொன்னடியன் கடற்கரை கவியரங்கம் நடத்துவதை அறிந்து இங்கே ஏரிக்கரை கவியரங்கம் தொடங்கி உள்ளார்.பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் கடந்த 24 வருடங்களாக ஏரிக்கரைக் கவியரங்கம் நடந்து வருகின்றது. சங்கத்தின் எதிரில் உள்ள அல்சுரி ஏரியின் மைய மண்டபத்தில் கவியரங்கம் நடந்த்து. பின்னர் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்க, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.
தமிழ்ச்சங்கம் நிறுவியவர்களில் ஒருவரான க. சுப்பிரமணி அவர்கள் ஏரிக்கரை கவியரங்கத்திற்கு தலைமை வகித்து கவியரங்கம் நடத்தி உள்ளார். தாமல் கண்ணன், அருள்வேலன் உள்ளிட்ட பலர் கவிதை வாசித்து உள்ளனர். 4 பேர் மட்டுமே வைத்து நடந்த கவியரங்கம் இன்று 50 கவிஞர்கள் வந்து கவிதை பாடி வருகின்றனர்.
ஏரிக்கரைக் கவியரங்க பொறுப்பாளர்களாக பலர் இருந்துள்ளனர். குறிப்பாக இராம. இளங்கோவன், சாமி இராமானுடம் போன்றோர் இருந்துள்ளனர். தற்போது பேராசிரியர் கோவிந்தராஜூ, கோ.சி. சேகர், அமுதபாண்டியன் ஆகியோர் கவியரங்கின் பொறுப்பாளராக உள்ளனர்.
புகழ்பெற்ற கவிஞர்களான அறிவுமதி, சம்பத், கடலூர் மணிமாறன், சுடர் முருகையா, தேனீராப்பாண்டியன், கருமலைத் தமிழாழன் உள்ளிட்ட பலர் தலைப்பில் கவியரங்கம் நடந்துள்ளது. எனது தலைமையிலும் 28.8.2016 அன்று கவியரங்கம் நடைபெற்றது. தமிழ் வளர்க்கும் பணியினை மிகச் செம்மையாக செய்து வருகின்றனர். பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ‘ஊற்று’ என்ற மாத இதழும் வெளிவருகின்றது.
பெங்களூருவில் சேசாத்திரி நகர் நேரு பூங்காவில் மலேசியா கவிஞர் ரவி உலகநாதன் பூங்காவில் வட்டமாக அமர்ந்து பூங்கா கவியரங்கம் நடத்தி வந்தனர். இப்போது நடைபெறவில்லை.
கர்னாடகவாழ் தமிழ்க்குடும்பங்கள் கூட்டமைப்பு உள்ளது. செந்தில் குமார் தலைவராக உள்ளார். நடத்துகின்றனர். தமிழறிஞர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம்வருடாவருடம் நடத்துகின்றனர் .இந்த வருடம் நடந்த பட்டிமன்றத்திற்கு நானும் சென்று வந்தேன் .முகநூலில் பதிவிட்டேன் . நுழைவுகட்டணம் ரூ. 500. என்ற போதும் தமிழ் மீது உள்ள பற்றால் பெருங்கூட்டம் வந்து இருந்தனர் .
பெங்களூருவில் திருவள்ளுவர் சங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 1960ல் பேரா. ஆ.ம. திருமலங்கனார் அவர்களால் தொடங்கப்பட்டு பின்னர் 1980ல் திருக்குறள் பதிப்புச் செம்மல் திரு. அ.ம. வேணுகோபாலனார் அவர்களால் செப்பனிடப்பட்டு 57 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகின்றது.
மாத இறுதி ஞாயிறு அன்று இலக்கியக் கூட்டம் நடக்கின்றது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், கவியரசு கண்ணதாசன், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி அவர்களது பிறந்த நாளில் விழா எடுத்து கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம் நடத்தி புகழ்பாடி வருகின்றனர். திருவள்ளுவர் திருநாளில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகின்றது.
இச்சங்கத்தில் 1500 உறுப்பினர்கள் உள்ளனர். இச்சங்கத்தின் சார்பாக கடந்த 35 ஆண்டுகளாக ‘குறள் ஒலி’ என்ற மாத இதழ் தொடர்ந்து வெளிவருகின்றது. வழக்கறிஞர் அரசு இதழ் ஆசிரியராக இருந்து திருவள்ளுவர் சங்கத்தை மற்ற பொறுப்பாளர்களின் உதவியுடன் சிறப்பாக நட்த்தி வருகின்றனர்.
மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு இலக்கிய நிகழ்ச்சி நடந்து வருகின்றது . இச்சங்கத்தில் "முத்தமிழ் அறிஞர் மு.வ." என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். ‘காலந்தோறும் கண்ணதாசன்’ என்ற தலைப்பில் கவிஞர் கே.ஜி. ராஜேந்திரபாபு அவர்கள் உரையாற்றினார். பரபரப்பான ஞாயிற்றுக்கிழமையிலும் 50 உறுப்பினர்கள் பார்வையாளராக வந்து விடுகின்றனர். அனைவருக்கும் மதிய உணவும் வழங்கி வருகின்றனர்.
இச்சங்கத்தின் சார்பில் நடத்தும் மாதாந்திர இலக்கிய விழாவிற்கு இலவசமாக அரங்கம் தந்து உதவி வருகிறார் சிறுமலர் உயர்நிலைப்பள்ளியின் தாளாளர் மதுசூதனபாபு அவர்கள்.
பெங்களூரு ஐ.ஐ.டி. காலனியில் உள்ள தமிழ்மன்றத்தில் பாவாணர் பாட்டரங்கம் நடைபெற்று வருகின்றது. புலவர் வீ. வில்வநாதன் தொடங்கி வைத்து 158 மாதங்களாக நடந்து வருகின்றது. மாதத்தின் ஞாயிறு அன்று கவியரங்கம் நடக்கின்றது. நானும் இங்கு சென்று கவிதை பாடி பரிசும் பெற்றேன்.
இந்த தமிழ்மன்றத்தில் பெருஞ்சித்திரனார், இளங்குமரனார் போன்ற தமிழ் அறிஞர்களும், நீதியரசர்கள் இஸ்மாயில், வள்ளிநாயகம் உள்ளிட்டவர்களும், கவிக்கோ அப்துல் ரகுமான், வலம்புரி ஜான், சுரதா, மன்னர்மன்னன், நடிகர் திலகம் சிவாஜி உள்ளிட்டோர் பங்குபெற்று உள்ளனர். நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற பலரும் இங்கு வந்து பேசி இருக்கிறார்கள்.
நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் அவர்கள் பாவாணர் பாட்டரங்கம் பொறுப்பாளராக உள்ளார்.எனது வேண்டுகோளுக்கு இணங்க ஹைக்கூ நூற்றாண்டு விழா இங்கு சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார் ..இனிய நண்பர் சேலம் பொன்குமார் தலைமையில் ஹைக்கூ கவியரங்கம் நடந்தது .நானும் ஹைக்கூ வாசித்தேன் .எனது "மனதில் ஹைக்கூ" நூலை பெங்களூரு வாழ் மரபுக்கவிஞர்களுக்கு நன்கொடையாக வழங்கி, அவர்களும் ஹைக்கூ எழுதி வந்து பாடினார்கள் .
ஹைக்கூ பற்றி கவிஞர்கள் அமரன் ,கே .ஜி .இராஜேந்திர பாபு கருத்துரை வழங்கினார்கள் .
இயந்திரமயமான உலகில் மனிதனும், இயந்திரமாகவே மாறி வரும் காலத்தில் பரபரப்பான பெங்களூரு நகரில் கர்னாடக மண்ணில் தமிழ்ப்பற்றுடன் தமிழ் வளர்த்து வருகின்றனர். தமிழக்த்தில் வாழும் தமிழர்கள் யாவரும் பாடமாகக் கொள்ள வேண்டும்.
கர்னாடகத்தில் வாழும் தமிழர்கள் இல்லங்களில் தமிழில் மட்டுமே பேசுகின்றனர். கன்னட மொழியும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். சில அறிஞர்கள் கன்னட மொழியில் தமிழ் இலக்கியத்தை மொழிபெயர்த்து வழங்கி உள்ளனர். குறிப்பாக நல்ல தமிழ் பேசுகின்றனர். கேட்க மிக இனிமையாக உள்ளது. முடிந்தளவு ஆங்கிலச் சொற்களின் கலப்பின்றி தமிங்கிலம் இன்றி நல்ல தமிழில் பேசுவது, எழுதுவது என தாய்மொழிப் பற்றுடன் இயங்கி வருகின்றனர்.
கர்னாடகத்தில் வாழும் தமிழர்கள், தமிழர்களோடு பேசும்போது, தமிழில் தான் பேசுகின்றனர். கன்னடர்களுடன் பேசும்போது கன்னடத்திலேயே பேசுகின்றனர். பல வருடங்களாக கர்னாடகாவில் இருப்பதால் மற்ற மொழி என்று கன்னடத்தை வெறுக்காமல் விரும்பிக் கற்று வேறுபாடு இன்றி கன்னடர் போலவே தமிழரும் கன்னடம் பேசுகின்றனர்.
கர்னாடக மண்ணில் தமிழர்களும், கன்னடர்களும் சகோதரர்-களாகவே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குள் எந்தவித கருத்துவேறுபாடும் இன்றி அன்பாக, அமைதியாகவே வாழ்ந்து வருகின்றனர். மனிதநேயம் மிக்க அன்பான நல்லவர்கள் கன்னடர்களில் பலர் உள்ளனர்.
விரல் விட்டு எண்ணக்கூடிய சில அரசியல்வாதிகள் தான் வாக்குக்காக தமிழர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். ஒரு சில மதவெறி அமைப்புகளும் தமிழர்களுக்கும், கன்னடர்களுக்கும் இனச்சண்டை வரவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கூலிக்கு ஆள் அமர்த்தி வன்முறை நிகழ்த்தி உள்ளனர்.
கர்னாடகாவில் தமிழ் வளமாக உள்ளது. நலமாக உள்ளது. அருமையாக உள்ளது. தமிழக அறிஞர்கள் தலைவர்கள் பிறந்த நாளில் இலக்கிய விழாக்கள் நடத்தி, பெருமைப்படுத்தி வருகின்றனர்.
கருவேப்பிலை எங்கு வளர்ந்த போதும் மணம் மாறாது அமெரிக்காவில் கொண்டு சென்று வளர்த்தாலும் அதே வாசம் வீசும். அதுபோல கர்னாடகத்தில் புலம்பெயர்ந்து வாழும் நம் தமிழர்கள்ல் தமிழ்மனம் மாறாமல் தமிழ்மணமும் மாறாமல் பண்பாடு காத்து தமிழ் வளர்த்து வளமாகவும், நலமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
.நன்றி நமது மண்வாசம் மாத இதழ் !