அன்பால் விருந்தாகும் மருந்து
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பால் விருந்தாகும் மருந்து !
×××××××××××××××××××××××××××××××××
அருமருந்தென வந்த மருந்து - தனி
மருந்து இஃது எனக் கண்ட மருந்து
மனதுள்ளே நின்று ஆடும் மருந்து
மலர்ந்த ஆன்மா மகிழும் மருந்து
சத்துவக் குணம் நிறைந்த மருந்து
முத்தெனவே ஒளிரும் மருந்து
மனையாளாய் வந்த மருந்து - என்
மனதை நாளும் ஆளும் மருந்து
தனி வித்தெனவே எனக்கெனவே
கனி முத்தெனவே விளைந்த மருந்து
முன்வினைப் பயனாய் என்னுள்
பின் முளைத்து தழைத்த மருந்து
காதலைக் கண்ணில் காட்டும் மருந்து
கருத்தை திருத்தி இருத்தும் மருந்து
நற்றுணையாய் பற்றும் மருந்து
கற்பூரமாய் என்னில் மணக்கும் மருந்து
முகத்தில் குங்குமப்பூ பூத்த மருந்து
முல்லை நகை காட்டும் மருந்து
மஞ்சள் பூசி மயக்கும் மருந்து
மங்கலமாய் விளங்கும் மருந்து
சதுர்முகன் கணித்து அளித்த மருந்து
சந்திர சூரியர் இணையாகா மருந்து
பொறை நிறை அணிந்த மருந்து
பொற்புடன் விளங்கும் மருந்து
மூவா மருந்து தந்த மருந்து தேவாதி
மூவர்கள் மனம் வாழ்த்தும் மருந்து
என் மீது படர்ந்த மருந்து
என்றும் பத்தியம் காணா மருந்து
ஊழை முறிக்கும் மருந்து
ஏழை எனக்கு இரங்கும் மருந்து
என்பால் அன்பாகும் மருந்து
அன்பால் விருந்தாகும் மருந்து