அழியாத கோலங்கள்
கலையாத நினைவுகள் நிலையாக நெஞ்சினில்
உறைந்திட்ட நிகழ்வுகள் நிறைந்திட்ட மனதினில்
தீட்டாத ஓவியங்கள் திகட்டாமல் உள்ளத்தில்
வரையாத கோலங்கள் அழியாமல் இதயத்தில்
சுழல்கிறது சுனாமியாய் எந்நேரமும் என்னுள் !
இளமைப் பொழுதுகள் விழிகளின் விளிம்பில்
இன்பமுடன் கழித்தவை இனிக்கிறது நினைவில் !
துன்பங்கள் சந்தித்தவை மிதக்கிறது செந்நீரில்
துக்கங்கள் நிகழ்ந்தவை துளிகளாய் கண்ணீரில்
அனைத்தும் கலந்திட்டேக் கடக்கிறது வாழ்வும் !
எழுதாத சட்டங்களாய் விதியிலா விதிமுறைகள்
கழுவாத பாத்திரமாய் கறைபடிந்த நெஞ்சங்கள்
அகற்றாத கழிவுநீராய் அரசியல் சாக்கடைகள்
முடியாத வழக்குகளில் முடிந்திட்ட தீர்ப்புகள்
அழியாத கோலங்களாய் தணியாத உள்ளத்தில் !
களிப்புற்றக் காதலும் வெளிப்படாத வேட்கையும்
பகைமை உணர்வுகளும் நகைக்கும் காட்சிகளும்
செய்திட்ட தவறுகளும் மறைத்த உண்மைகளுமே
நெஞ்சில் நிலைக்குமென எண்ணாது ஒருநாளும்
அழியாத கோலங்களென நினையாதீர் ஒருபோதும் !
தாய்மடியின் சுகமும் தந்தையின் அரவணைப்பும்
வளர்த்தோரின் பாசமும் பயின்ற கல்விக்கூடமும்
போதித்த ஆசிரியர்களும் பெற்ற அனுபவங்களும்
மூச்சுள்ளவரை அழியாது கலையாது அழித்தாலும்
அழியாத கோலங்களே அனைவரின் இதயத்திலும் !
பழனி குமார்