தூது சொல்வாயா தென்றலே

எந்தன் நெஞ்சத்தில் வித்தைகள் காட்டி
பஞ்சு மெத்தையில் துயில்கொள்ளும்
அவளிடம் தூது சொல்வாயா? எனைத்
தீண்டி அவளின் இனிமைகளைப் பகரும் தென்றலே!

புன்னகைத்தே புதைந்துபோய் அவள்
கன்னங்களில் உறங்கும்போதாவது
உயரே வந்து புது உருவம்கொடுக்கும்
கன்னக்குழியினை காணவேண்டுமென்று
அவளிடம் தூது சொல்வாயா தென்றலே?

ஒருசில நேரங்களில் என்னைப்
பார்க்காதது போல் நடித்தும்
பார்ப்பதைத் தவிர்த்தும்
பார்த்தே என்னைத் தவிக்கவைக்கும் அவள்
விழிகளின் உறக்கத்தைக் காணவேன்டுமென்று
அவளிடம் தூது சொல்வாயா தென்றலே?

ஓய்வில்லாமல் துடித்து நான் விழும்
அந்த விழிகளின் மேல் படர்ந்து
இமைக்க மறந்து இனிமையாய் உறங்கும் அவள்
இமைகளைக் காணவேண்டுமென்று
அவளிடம் தூது சொல்வாயா தென்றலே?

கருமையை பூசிய இரு புருவங்களும்
மிகச்சிறியதாய் ஒன்றும் அதைவிடச் சிறியதாய்
அதன் கீழும் அவள் இட்டிருக்கும்
நெற்றிப் பொட்டுகளும் அவள் துயிலும்போது
தலையணையில் மோதி வரைந்த
ஓவியத்தைக் காணவேண்டுமென்று
அவளிடம் தூது சொல்வாயா தென்றலே?

காற்றிலே அவ்வப்போது கலைந்தும்
என்னுள் வண்ணங்களை வரைந்தும்
அவள் உறக்கத்தில் அங்கங்கே
சிதறிக் கிடக்கும் அந்த கருங்
கூந்தல் முடிகளைக் காணவேண்டுமென்று
அவளிடம் தூது சொல்வாயா தென்றலே?

அவள் நினைவுகளால் நான் வாடும்
எந்தன் தனிமை உணர்வுகளை
அவள் உறங்கும்போதாவது
காதிலும் கனவிலும் சொல்லிவிட
அவளிடம் தூது செல்வாயா தென்றலே?

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (3-Dec-16, 8:39 am)
பார்வை : 161

மேலே