காதல் அருகாமை
புறப்படும் நாள்வருமே
-----------------------------------------
வாசவரி கூட்டி
வார்த்து வைத்தே காற்றினிலே
ஈரக் கவியாக்கி
ஏற்றிவிட்டேன் முகிலினிலே
இங்கே நான் தனிமையிலே
இளவேனில் இல்லையடி
சமயம் நகரவில்லை
சகலமுமே தொல்லையடி
உன்னைப் பார்த்து வர
ஓடும் நதி செய்தேன்
திரும்பாக் காரணத்தால்
தேம்பிக் கண்சிவந்தேன்
கூந்தல் சேர்வதற்கு
கோடை மலர் கொய்தேன்
கொடுத்தனுப்ப இயலாது
வாடவிட்டே வதங்கிநின்றேன்
சேராத் தூதனைத்தும்
சேர்த்தே காதலாக்கி
வாரி அணைத்துனக்கு
வண்ணப் பரிசளிப்பேன்
காத்திரு கண்மணியே
கனிந்தது நாள் இனியே
பூத்திரு விழி மலரே
புறப்படும் நாள் வருமே !
...மீ.மணிகண்டன்
#மணிமீ
22 - July - 2016