தேடுதல்

ஆனந்தக் களிப்பு

உன்னைநீ உன்னுள்ளில் தேடு - மிக
. உன்னத ஞானத்தைக் கல்வியில் தேடு !
வன்மை எழுத்தினில் தேடு - அடி
. வாழும் முறையிறை வாக்கிலே தேடு !

செல்வத்தில் ஈகையைத் தேடு - பல
. செய்கையி லேவுள்ள நன்மையைத் தேடு !
வில்வத்தில் ஈசனைத் தேடு - அடி
. வித்தையில் மற்றவர் வாழ்வினைத் தேடு !

யாக்கையி லேநலந் தேடு - மருந்து
. யாண்டும்நீ உண்ணும் உணாவினில் தேடு !
காக்கையில் நன்னெறி தேடு - அடி
. காலத்தி லைம்புல னாட்சியைத் தேடு !

சாத்திரத்தில் நன்மை தேடு - அது
. சாற்றிடுஞ் சொற்களில் உண்மையைத் தேடு !
பாத்திரத் தூய்மையைத் தேடு ! - அடி
. பாவாய் உலகத்தின் தேடலைத் தேடு !

கண்களில் ஈரத்தைத் தேடு - வருன்
. காசினைச் செய்தொழில் நேர்மையில் தேடு !
பண்ணில் கருத்தினைத் தேடு - அடி
. பாலன்ன நன்மன வண்ணத்தைத் தேடு !

வேம்பில் அமிழ்தினைத் தேடு - மதி
. வேகத்திலே பல சித்துகள் தேடு !
சோம்பல் இல்லாவுடல் தேடு - அடி
. சோர்விலும் தெய்வத்தின் காலடி தேடு !

மஞ்சள் மருத்துவம் ! தேடு - மரம்
. மண்ணின் வளங்கள் குவித்திடும் தேடு !
அஞ்சில் அனைத்தையும் தேடு - அடி
. அம்பதில் ஏதும் வளைந்து விடாது !

நெஞ்சுக்கு நிம்மதி தேடு - அதை
. நேர்மை அறத்தின் நெறிதனில் தேடு !
அஞ்சல் தவிர்ப்பதைத் தேடு - அடி
. ஆரணங்கே உயிர் ஆண்டவன் கூடு !

காதலை எங்கணும் தேடு - இந்தக்
. காசினி மீது கருனையைத் தேடு !
சாதலில்லா நிலை வேண்டில் - உடல்
. சாரத்தைக் காத்திடும் நல்வழி தேடு !

குப்பைக்குத் தொட்டியைத் தேடு - சிறு
. குப்பை என்றாலும்நீ தொட்டியில் போடு !
தப்பைத் திருத்திடத் தேடு - அடி
. தாரணி என்பது தேடலின் காடு !

- விவேக்பாரதி !

எழுதியவர் : விவேக்பாரதி (3-Dec-16, 11:28 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
Tanglish : theduthal
பார்வை : 57

மேலே