நினைவழியா நிமிடங்கள்

சக்திமான் போடும்
நாலுக்குள்
சடுதியாய் கரண்ட்
வந்திடுமா?
கவனிலிட்ட
சிறுகுண்டில்
கரிச்சான்குஞ்சி
வீழ்ந்திடுமா?
தும்பி பிடிக்கும்
நாளைய தேதிக்குள்
கழித்த
வேலிக்காலெழுமா?
காகிதக் கப்பல்
செய்திடும் நாளில்
கடும்புயலென
மழைப் பொழிந்திடுமா?
கண்ணன் சாரின்
கணக்கு வகுப்பில்
கடுங்காய்ச்சல்
உடன் வருமா?
கரையான் குடைந்த
கொல்லைப் புங்கையில்
களத்துக் கிளிகள்
குடிபுகுமா?
கட்டைத் தூண்டில்
கடைசி மண்புழு
கனத்த விரால்
கைவருமா?
நம்பித் தோட்ட
நாவல் திருட்டில்
நாகப்பாம்பது
தடையிடுமா?
கொளுத்துங்
கோடையில்
குதித்தெழுந்திட
மீண்டும் காவிரி
நுரைத்தருமா?
கார்த்திகைப் பனியில்
சுருங்கிடும் இதழில்
கனிந்த பனையின்
சுளை வருமா?
வீதி விளக்கை
வளைத்திடும் விட்டில்
விடிவதற்குள்ளதை
தின்றிடுமா?
புண்ணியக்கோடியின்
புதுப்பம்பரம்
கூரிய வீச்சில்
பிளந்திடுமா?
குறுக்குச் சந்தின்
புழுதிச் சாரியில்
கிட்டிப்புல்லது
கிளர்ந்தெழுமா?
அப்பா பழகிய
பட்டணப் பொடியது
இழுத்த இருமலில்
இதந்தருமா?
இந்த வருட
தீபாவளிக்கேனும்
இரட்டைத்திரி குண்டு
கிடைத்திடுமா?
தலையிலெண்ணெய்
கையில் சீயக்காய்
கலவையில்
தாமரை கருகிடுமா?
ஆடிக்காற்றில்
அசராப் பட்டம்
வானவில்லின்
சிரந்தொடுமா?
திருவிழா கடைகளின்
திடீர் பிரகாசம்
இருண்ட குடிசையில்
தினம் வருமா?
தவளைகள் போட்டிடும்
தகதிமித் தாளம்
தண்ணீர் மொழியின்
தனி லயமா?
குன்றில் மணி
விதையூதும்
குடு குடு
தாத்தா பாட்டதிலும்
பச்சைக்குதிரை
பல்லாங்குழி
பதிந்த
பருவத்தடமதிலும்
அனிச்சம்பூ
அழகுப் பீலி
பதியமிட்ட
பொழுததிலும்
கூட்டாஞ்சோறின்
கூடுதல் பகிர்விலும்
கூட்ஸ் வண்டியின்
குனிந்தோட்டத்திலும்
கண்ணாமூச்சியின்
கலவர மண்ணிலும்
களவுப் போன
மகரந்த நொடிகளில்
இவைத் தாண்டி
சிந்தை
சென்றதில்லை
என்றும்!
அதனால்தான்
இனிக்கிறது
பால்யநதி இன்றும்!!!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (23-Dec-16, 10:49 am)
பார்வை : 155

மேலே