இதயமொழி

கண்ணீரொரு
விசித்திர நிவாரணி
வலிகளை வடிக்க
முடித்த இதனால்
நினைவுகளை
அழிக்க முடிவதில்லை!
தீயனைக்கும்
நீர் ஜாதிதான்
எனினும்
சிதறும் துளி
முடிவொன்றில்
சினத்தீயே பற்றுகிறது!
மரண வீட்டில்
நீர்மாலையாகவும்
மனவடுக்கில்
பூமாலையாகவும்
இதனால் மட்டுமே
இயலுகிறது!
சுரணையின் குறியீடாம்
உப்பாலானாலும்
உதிரும் துளி
ஒவ்வொன்றிலும்
சேர்த்தே
சுண்டிவிடுகிறது
சுரணையும்!
மனதை
வெள்ளையடித்து
கொள்வதற்கான
உபகரணமும்
இதயம்
கொள்ளையடித்து
போனோரின்
உறைவிடமும்
இதுவேதான்!
நிறமற்ற நீரினத்தின்
வாரிசு
இதற்குதான்
எத்தனை நிறம்!
ஏமாற்ற வடிகையில்
நீலிக்கண்ணீர்!
வஞ்சமாய் வடிகையில்
முதலை கண்ணீர்!
உணர்ச்சியின் உச்சத்தில்
ஆனந்தக் கண்ணீர்!
வடியுமிடம்
பொருத்தே
மாறுபடுகிறது
நிறமும் நிசப்தமும்!
முன் நிற்கும்
முகங்காட்டும்
நிலைக்கண்ணாடி
போல
அகம் உள்விழுந்த
உருக்காட்டும்
மனக்கண்ணாடி
இவை!
பல மொழிகள்
புழங்கும் உலகின்
பலவீன மொழி!
அறியாச் சொற்களுக்கு
அகராதியில்லை
அனுபவமே வழி!
புவியடி படிமங்கள்
வைரமாக
எத்தனையோ
ஆண்டாகுமாம்!
சில நொடிகள்
போதும்
இப்பூவிழி திரவம்
உருளவும் வறளவும்!
எனினும்
வைரக்கற்களைவிட
இவ்விழி மொழி
சொற்களே
உயர்ந்தவை!
பொருளற்ற ஓரிடம்
அதன்
வடிகாலாக வேண்டாம்!
பொருளாசை
அதுநாடி
வடித்திடவும்
வேண்டாம்!!
****************************

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (25-Dec-16, 1:12 pm)
பார்வை : 73

மேலே