மிதிவண்டி பழகிய நாளொன்றில்
மிதிவண்டி பழகிய முன்னதொரு நாளொன்றில்
விதிவந்து என்னோடு விளையாடிய பருவம்...
ஆறாம் வகுப்பு முடித்தவேளை.. அதிலும்,
ஆர்வக்கோளாரும் கூடிய வேளை...
அரைக்கால் சட்டையும் அதன்மேல்
மங்களகரமாய் இருக்கவேண்டுமென மஞ்சள்நிற மேலாடையும்...
அரைகுறை மிதிவண்டியை நான் ஓட்டத் துவங்க
குறைநிறை கூறும் பயிற்சியாளனாய் என் நண்பன்...
வீதியில் பழகினால் விபரீதம் நடந்துவிடும் என அஞ்சி
விரைந்து கிளம்பினோம் யாருமற்றதொரு மண்சாலைக்கு...
போகும் வழியினில் சற்றே இறக்கமான பாதை
போய்தான் பார்ப்போமென நானும் ஓட்டத்துவங்க...
கரம் பற்றிய கைப்பிடியினை
கவனமாய் நானும் அசைத்துக்கொடுக்க...
அசைவாடிய மிதிவண்டியில்
இசைபாடிக்கொண்டே நானும் சென்றேன்...
ஒருவழி செல்லாமல் ஓட்டிய எனைப்பார்த்து
ஓடிவந்தே பின்னால் பிடித்திருந்த நண்பன் சொன்னான்...
மெதுவாகச் செல்...
நேராகச் செல்... என...
சட்டென எதிரே வந்த பெண்ணொருத்தியின்மேல்
சக்கரத்தை நிறுத்தாமல் நானும் முட்டிமோத...
வேறென்ன..?
மங்கையின்மேல் மிதிவண்டி...
உழைத்துக் களைத்த சில அன்னையர்கள் கூட்டம்
ஓடிவந்து ஒவ்வொருவராய் எங்களைத்தூக்க...
சிறுபிள்ளைபோல சினுங்கி நின்றோம்.,
பண்ணிரண்டை தொட்ட நானும்
எண்ணிரண்டைக் கடக்கும் அவளும்...
சிதறிய பாடப்புத்தகங்களை எடுத்து
பதறிய அவளுக்கு நானும் கொடுக்க...
"மன்னிப்புகோர நான் வாய்மொழிய முயலுகையில்
கண்ணசைத்து மெல்லச் சிரித்து சென்றாள்...
அடியொன்றும் படவில்லை என
அகிம்சை வழியில் அன்பினைக் கூறினாள்..."
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
