இந்தியா ஒளிர்கிறது

பாட்டன் பாடுபட்ட வயல்களில் பாதியை
பங்காளிகளுக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டு…
மீதமுள்ள வயலைக்கொண்டு
மிதமாய் வாழ்ந்துவந்தேன்…
கட்டியவள் துணையிருக்க கழனியொல்லாம் பயிரிட்டு
கடனின்றி கடந்துவந்தேன் என் வாழ்வின் ஒருபாதியை…
என் சிரம் உயர்த்த பிறந்தமகனை சீமையில் படிக்கவைக்க
சிரமப்பட்டு படிக்கவைத்தேன் என் நிலங்களை அடகுவைத்து…
பட்டம்பெற்ற என்மகனுக்கு பட்டணத்தில் வேலைபெற
கட்டணம் செலுத்த எனக்கு கடன்வாங்க நேரிட…
பட்ட கடனில் பாதியைக்கூட கட்டமுடியாமல்
விற்றுவிட்டேன் என் விளைநிலங்களை…
சீமைக்கு போனமகன் சீரழிந்துபோக
சிக்கலாகிப்போனது என் குடும்பம்…
குடியிருந்த குடிசையை அடைமானம்வைத்து
குடும்பம் நடத்த வழியின்றி கூலிக்கு வேலைசெய்தேன்…
கரம்பிடித்த கண்ணகியோ
வரம்கிடைத்து வானகம்போக…
கருகிப்போனது என் வாழ்வு.,
இருகிப்போனது என் இதயம்….
இடர்பாடுகளை இதுபோன்று நாங்கள் சுமக்க
இந்தியா எங்கிருந்து ஒளிர்கிறது…
பாவப்பட்ட எங்கள் வயிற்றினில்
பசியாகத்தான் இந்தியா ஒளிர்கிறது…!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (30-Dec-16, 9:27 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 37

மேலே