எதிர் வீட்டு ஜன்னல்- ஒரு பக்க கதை- கவிஜி

எதிர் வீட்டு ஜன்னல்- ஒரு பக்க கதை- கவிஜி

அதிகாலையோ அந்தி மாலையோ... எப்போது திறக்கும் என்று தெரியாது. ஆனால் திறக்கும். கிறக்கும் அந்த எதிர் வீட்டு ஜன்னல். அந்த எதிர் வீட்டு ஜன்னலில் தினம் ஒரு வண்ணம் வழிவது, மாயம் செய்தன என்னை. மாய நதிக்குள் ஒளி கலந்து பூசிய நிறக்குடுவையின் உடைந்த சிதறலென சித்திரமாகி இருக்கும். திறந்த சற்று நேரத்தில்... மெல்ல மெல்ல கைகள் இரண்டு கன்னத்தை தாங்கிக் கொண்டோ, ஆச்சரியத்தை வீசிக் கொண்டோ... மறைக்கும் திரை சீலைக்குள் வெளி சொல்லிய நுழைவாக சற்று நிறம் மாறும். பின் கரம் மாறும் நொடிகளில்... புதிர் மாறும் மீண்டும் எனக்குள்.

சிவப்பின் ஸ்வப்னத்தில் சீக்கிரம் விடியும் ஒருநாள்... விடியலில் தூரத்தை படக்கென்று மாற்றி எழுதி விட்ட மறுநாள் நிறம் மஞ்சளாய் சிணுங்கும். குரல் எழுப்ப தூரத்தில் இருப்பதாக நம்பிக் கொண்டு கண்களின் வார்த்தைகளுக்கு காதலின் ஊற்றை மெல்ல சொட்டுவேன். மெல்லிய கோடுகளை மேலே மேலே அழுத்திக் கொண்டு திரியும் என் அசைவுகளின் சிகரத்தில்... அந்த ஜன்னல் வயலெட் நிறத்தில் வான்காவின் ஓவியமாகி இருக்கும். கண்கள் தேய்த்து....முகம் துடைத்து நெற்றி சுருக்கி... உடல் மினுங்கி காணவில்லை என்று உறுதி செய்யவே அடுத்த பத்து நிமிடங்கள் ஆகும். படக்கென்று இழுத்தடைத்து விட்ட ஜன்னலில் ஒளி வீசிக் கவிதை செய்யும் தீரா மௌனம், படர்ந்து கொண்டிருக்கும். தூசுகள் படர்ந்து ஒளிப்பாலம் செய்து கொண்டிருக்கும். நிலை கொள்ளா இயக்கத்தின் தவிப்புகளை எல்லாம் சதுர பொக்கிஷமாக்கி மீண்டும் மீண்டும் நெகிழ செய்யும்.

பாவி மனது அலை பாய்ந்தே மன சிலை உடைக்கும்.. பின் புது கலை வடிக்கும். கழுகின் தூரப் பார்வைக்கு தப்புமா என் எதிர்... மீண்டும் மீண்டும் கண்டு கண்டு... மாயம் செய்தே திறக்க செய்வேன். அனிச்சையாய் திறந்தாலும் கைகளில்..... நிறம் மாறி மெல்லிய ரோமங்கள் சிலிர்க்க செய்யும் தூதுக்கு காற்றின் சூழல் ஒன்றை கசிய விட்டு காத்துக் கிடைக்க செய்யும் மறுமுனை வினைக்குள் மீண்டும் மீண்டும்.. நான் திறந்து கொண்டேயிருப்பேன் ஒரு முறை அவள் திறந்த அவள் நிறத்து ஜன்னலை.

பெயர் தெறியா....உருவமும் அறியா நிலைபாட்டுக்குள் நிறம் மாறிக் கொண்டேயிருக்கும் ஜன்னல் மட்டுமே என ஆறுதல். திறக்காத நாள் எல்லாம்.. திறந்தே கிடக்கும் என் வானத்தில் நான் பறவையற்ற சிறகு.

நாட்கள் நகர்ந்தன...

நிறங்கள்.. ஏழு தாண்டி பதினான்கு தாண்டி... நிறம் நூறு என்ற போது கனவோ என்று படக்கென்று எழுந்தமர்ந்தாலும் மெல்லிய தென்றல் மென் சாரல் குழைந்து, திறந்து விட்டு ஜன்னலை புது நிறமாக்குவாள்.

இனி முடியாது... இனி காத்திருக்க இயலாது என்று முடிவெடுத்த நாள் ஒன்றில்...அவள் ஜன்னல் திறக்கவே இல்லை.

நன்றாக உற்று கவனித்தேன்... ஜன்னல் இருந்த இடம் சற்று நகர்த்திருந்தது. எப்படி என்று யோசித்து யோசித்து இன்னும் கூராக்கி பார்க்கையில் கண்களில் தெரிந்த மாயம் போல வந்த சுழல் ஒன்றில்...அந்த எதிர் வீட்டு ஜன்னல் பூமியை ஒட்டிக் கடந்த வேற்று கிரகத்தின் வீடென புரிந்தது. கிரகம் சுழன்றதில் ஜன்னலும் காணாமல் போயிருந்தது.

படக்கென்று அடைத்து விட்டு வந்தேன். அதன் பிறகு என் வீட்டு ஜன்னலை நான் திறப்பதேயில்லை.

கவிஜி

எழுதியவர் : கவிஜி (3-Jan-17, 8:02 pm)
பார்வை : 587

மேலே