கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு
கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு - தலைப்பு .
கவிதை :- மரபு கவிதை .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி , தமிழ்நாடு , இந்தியா .
கல்லினையே விட்டுவிட்டால்
------ கட்டிடங்கள் எழுந்திடுமா ?
சொல்லினையே விட்டுவிட்டால்
----- சொந்தங்கள் சேர்ந்திடுமா ?
சில்லறையைப் பார்த்துவிட்டால்
------ சிரித்திடுமே சமுதாயம் .
வில்லாகி வளைந்திடுமா ?
------ வினையாகிப் போகிடுமா ?
கற்றலுக்குச் சொல்வேண்டும்
----- கவிதைகளைப் படைத்திடவே .
வற்றாத நீரோடை
------ வந்திடுமே கல்லாகி
பெற்றிடுவர் இரண்டையுமே
------ பேருலகம் உள்ளவரை
உற்றவர்கள் ஏற்றிடுவர்
------ உண்மையினை எந்நாளும் .
செவிகளிலே புகுத்திடலாம்
------ செம்மையான சொல்லினையும்
புவிதனிலே கட்டிடலாம்
------ புதுவீடு கல்கொண்டே .
கவிதைகளை வனைந்திடலாம்
------ கல்விகற்ற சொல்கொண்டே .
நவில்கின்ற சொல்லினையும்
------ நயமாக நவின்றிடுவீர் !!!
கட்டிடங்கள் கட்டுதற்குக்
------ கல்லினையே உளிகொண்டு
வட்டமாகப் பிளந்திடலாம்
------ வகையான வடிவத்தில்
திட்டமிட்டு வாழ்வதற்கு
------ திண்ணமிதே நம்பிடுவீர் !
பட்டங்கள் பெறுவதற்குப்
----- பண்பான சொல்வேண்டும் .!!!
வாழ்விற்குச் சொல்லினையும்
------- வளத்திற்குக் கல்லினையும்
காழ்ப்புணர்ச்சி ஏதுமின்றிக்
------- கற்றவர்கள் பெற்றிடுவார் .
வீழ்ந்திடாது சந்ததியை
------ விளங்கிடவும் செய்திடுவார் .
தாழ்திடவும் வேண்டாமே
------ தாபிப்போம் இஃதொன்றே !!!
மழலைகளும் பணிசெய்தால்
------ மங்கிடுமே மண்ணுலகம்
உழவுக்கு மாடுபோல
------ உருவாக்கும் இவ்வெண்ணம் .
குழந்தைகளும் கூலிகளா ?
------ குலம்தழைக்க வந்தவரா ?
அழகான கல்வியுமே
------- அவர்களுக்கும் வேண்டுமென்பேன் !!!!