அழிவின் விளிம்பில் சர்க்கஸ் கம்பெனிகள் இனி தாக்குப் பிடிக்க முடியுமா
இந்தியாவில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு சலுகை வழங்காமல், அரசு முற்றிலும் புறக்கணிப்பதால், பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் கூட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சர்க்கஸ் கலை சாகசம் நிறைந்தது; உயிரைப் பணயம் வைப்பது. அந்தரத்தில் பார் விளையாட்டு, மரண கூண்டுக்குள் பைக் ரேஸ், சிங்கம், புலி, கருஞ்சிறுத்தை என, கொடிய விலங்குகளை சாட்டையின் ஒரு சொடுக்கில் ஆட்டுவிக்கும் சாகசங்கள், பார்வையாளர்களை, "சீட்'டின் நுனிக்கு வரவைக்கும்.
இந்தியாவில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், நியூ கிராண்ட், அப்போலோ, நேஷனல், கேமல், மகாராஜா, வீனஸ் என, மிகப்பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் கோலோச்சின. ஒவ்வொரு கம்பெனியை நம்பியும், 350க்கும் குறையாத கலைஞர்கள் இருப்பர். இது தவிர, சின்ன கம்பெனிகள் நூற்றுக்கணக்கில் இருந்தன. இதில், 50 முதல், 75 பேர் இருப்பர்.
சர்க்கசை நம்பி, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் சாகச கலைஞர், தொழிலாளர்கள் வாழ்ந்தனர். ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, மகன், மகள் ஒரே கம்பெனியில் இருப்பர். சர்க்கஸ் கூடாரம் எங்கெல்லாம் மாறுகிறதோ, அங்கெல்லாம் இடம் மாறுவர்.
இந்திய சர்க்கஸ் கலைஞர்கள், எத்தியோப்பியா, சூடான், எகிப்து, லெபனான், சிரியா, ஈராக், ஈரான், குவைத், ஜோர்டான், கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் விமானத்தில் பறந்தனர். அங்குள்ள சர்க்கஸ் கம்பெனியை விடவும், அதிக சாகசம் செய்து புகழ் பெற்றனர்.
கடந்த, 2000ம் ஆண்டு, வன விலங்குகளை சர்க்கசில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, சர்க்கஸ் கலைஞர்கள் வாழ்க்கை திசை மாறியுள்ளது. அடுத்த இடி, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தின் வடிவில் வந்தது. இச்சட்டத்தால், சிறுவர், சிறுமியரை பயிற்சியில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டது. அதனால், சர்க்கஸ் கலைஞர்கள் தங்கள் குழந்தைகளை வேறு தொழில் துறைகளுக்கு அனுப்பத் துவங்கியுள்ளனர்.
இப்போது, 40 கம்பெனிகள் அழிந்து விட்டன, 25 மட்டுமே உள்ளது. சிறிய கம்பெனி முதலாளிகள், சர்க்கஸ் கம்பெனியை வந்த விலைக்கு விற்று விட்டு, வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். "டிவி,' சினிமா, போன்ற பொழுது போக்கு அம்சங்களாலும், சர்க்கசுக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால், போதிய வருமானம் இல்லை.
சர்க்கஸ் காட்சிகள் நடந்தாலும், நடக்காவிட்டாலும், கலைஞர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் தந்தாக வேண்டும். யானை, குதிரை, ஒட்டகம், நாய் போன்ற விலங்குகளுக்கு தீனி போட வேண்டும். 200 பேர் வரை உள்ள கம்பெனிக்கு தினமும், 40 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. தவிர, சர்க்கஸ் கூடார பொருட்களை இடம் மாற்ற, 40 லாரிகளுக்கு வாடகை தர வேண்டும். கூடாரம் அமைக்க ஐந்து நாட்களும், பிரிக்க இரண்டு நாட்களும் ஆகும். இதற்கு, தொழிலாளர்கள் தட்டுப்பாடும் உள்ளது. அதனால் பெரிய கம்பெனிகள் கூட, திவாலாகும் நிலையில் உள்ளது என்கிறார், தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஒருங்கிணைப்பாளர் ஈரோடு பாபு.
சர்க்கஸ் கலைஞர்களுக்கான சலுகைகள் மாநிலத்திற்கு, மாநிலம் மாறும். தமிழகம் போன்ற மாநிலங்கள் அடியோடு, இக்கலைஞர்களை புறக்கணிக்கின்றன. குஜராத், கேரளாவில், மூத்த கலைஞர்களுக்கு பென்ஷன் உண்டு; தமிழகத்தில் இல்லை. எனவே, சர்க்கஸ் கலைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகை வழங்க வேண்டும் என்பது, இவர்களது எதிர்பார்ப்பு.
நன்றி தினமலர் ௨௬-௧௧-௨௦௧௧