இயற்கையின் கைவசமே

இனியதாம் எந்தன் உலகம்
இயற்கையின் கைவசத்தில்...

காலை விழித்ததும் கண்ணெதிரே
கதிர்பாய்ச்சிடும் செங்கதிரோன்...

மனமயக்கும் மாலைவேளையதில் இரவை
இயக்கவரும் வெண்மதியாள்...

மண்ணினின்று விண்சென்று மாரியாக
மாறிவரும் கார்முகில்...

வெண்ணிலவை முற்றுகையிட்டு யாமும்
அழகுதானெனும் விண்மீன்கள்...

கண்குளிர கணம்கணம் கரைவந்து
கவர்ந்திழுக்கும் அலைதிரை..

புவிசுற்ற வழிசெய்து கம்பீரத்
தோற்றமளிக்கும் நெடுமலைகள்...

மக்களுக்கும் மாக்களுக்கும் பயனளிக்கும்
கிளைவழிக் காடுகள்...

வீழ்ந்தாலும் நல்லோசை எழுப்பி
களிப்பூட்டும் நீரருவிகள்...

மாசுபடுத்தும் மாந்தனுக்கு மாசுநீக்கி
சுவாசமளிக்கும் மரங்கள்...

பணிவாலோ எதனாலோ தலைதாழ்த்தி
நின்றிடும் நெற்கதிர்கள்...

இவையாவும் இயற்கைத்தாய் இன்பத்துடன்
நமக்கீன்ற பரிசன்றோ?

இன்பந்தான் இங்குண்டோ இயற்கை
இங்கு இல்லையெனில்?

இறையோன் அமைத்த இயற்கையதன்
கைவசமே அண்டமெலாம்..!

-ரசீன் இக்பால்

எழுதியவர் : ரசீன் இக்பால் (12-Jan-17, 6:25 pm)
பார்வை : 16698

மேலே