கடலோரக் கவிதைகள்
வெள்ளிக் கடற்கரை மணலின் மீதே
நாம் நடக்கும் வேளையிலே
நமக்கு முன்னே மணலை ஊடுருவி
வெளிவரும் கடல் நண்டுகள்
அதன் பின்னே ஓடிடுவர் மீனவச்சிறுவர்
லகுவாய் அவற்றைப் பிடித்து
மூங்கில் பையிலே போட்டு வீடு திரும்பிடுவர்
சற்றே கடல் நீரில் காலை நனைக்க சென்றால்
கடலலைகள் தந்து செல்லும்
வண்ண வண்ண கிழிஞ்சல்கள்
கடற்கரை மணலில் பாய் விரித்து படுத்து
நீல வானை அண்ணாந்து பார்க்கையிலே
எங்கிருந்தோ வந்தது கடற்காற்று
அத்துடன் வந்தது கடற்கே உரித்தான
வாடை , கடல் வாடை மீன் வாடை
கட்டுமரத்தில் அதி காலை முதல்
அந்தி சாயும்வரை கடலில் திரியும் மீனவர்கள்
மீண்டுவந்து இல்லம் சேருகையில்
கையில் கொண்டுவருவது வெற்று வலையா
இல்லை மீன் நிரம்பிய வலையா
ஒவ்வொருநாளும் மீனவர்க்கு இது ஓர் சவால்
வயற்பரப்பில் உழவன் என்றால்
கடற்பரப்பில் மீனவர்குடி மக்கள்
உழவன் சிந்தும் வியர்வை மண்ணை நனைக்கும்
மீனவன் சிந்தும் வியர்வை
உப்பு கடல் நீரில் சங்கமம்
மண்ணே உழவர்க்கு வாழ்வும் வீழ்வும்
கடலே மீனவர்க்கு மண்ணும் வாழ்வும்
மண்ணும் கதிரவனும் உழவர்க்கு கடவுள்
கடலும் கதிரவனும் தான் மீனவர்க்கு கடவுள்
கடற்கரை நாடி செல்லும் நம்மவர்க்கு
கடற்கரைக் காற்று தரும் தனி சுகமே
அது இளம் காதலரை கொண்டு சேர்க்கும்
அவர்க்கென தனி சுகமும் சேர்க்கும்
கோடையில் மக்கள் சாரை சாரையாய்
முற்றுகை இடுவது கடர்க்கையே அன்றோ
சிறுவர்க்கும்,பெரியோர்க்கும் உற்சாகம் தருவது
அப்போது கடற்கரைத்தான் அது தரும்
சில்லென வீசும் கடல் காற்றுத்தான்
உப்பில்லா பண்டம் பாழ் என்பர்
உப்போடு சுவையான மீனும் தரும் கடல்
நம்மை வாழவைக்கும் மீனவர்க்கு வாழ்வுதரும்
கடலே நீ நீடு வாழ்க ,நீடு வாழ்க