கலங்காதே என் மனமே
தோல்வியே தீண்டுகிறதா
கலங்காதே என் மனமே
தீ தீண்டும் தங்கம்
மீண்டும் மினுமினுக்கும்
காற்றும் நுழையாத
ஆழ்கடலில் ஒளிந்தாலும்
துரோகக் கழுகுகள்
தூண்டிமுள்ளிடுகிறதா
கலங்காதே என் மனமே!
மின்மினிப்பூச்சி வலைவீசினால்
நிலவு வசப்படுமா ?
வாழ்க்கை உன் உயிரை
துன்பங்களுக்கு விற்பனை
செய்துவிட்டதாக வருந்தாதே
காத்திரு
நீ கண்டது வானவில்லின்
ஓர் வர்ணமே
கை முறிந்ததென
கலங்காதே என் மனமே
முறிந்தது இருகுகளே
சிறகல்ல!
எழுத்து வா
உன் உயிருக்கு நாண் ஏற்றிவிடு!
உளியும் நீயே
சிற்பியும் நீயே
நல்லெண்ணம் கொண்டு
நல்லதோர் தோற்றம் பெற்றுக்கொள்
துன்பங்களுக்கு தூக்குத்தண்டனை
விதித்து பேனா உடைத்துவிட்டு
அன்பெனும் ஆயுதம்
எடுத்து வா
சிறையில் இருக்கும்
வசந்தத்தின் கைவிலங்கை
உடைத்து விடு!
உன்சுவாசப் பையை
சுத்தம் செய்து வா
வசந்தத்தின் விடியல்
வரவேற்க காத்திருக்கின்றது
எழுந்து வா என் மனமே
வெற்றியின் வாசல்
இன்னும் சிறிதுதூரம் தான்
விழுவது விதையென்றால்
எழுவது விருட்சமாகும்
என்பதை மறவாதே!