மோகனப் புன்னகை நிலவே - தரவு கொச்சகக் கலிப்பா - மரபு கவிதை
மோகனமாய்ப் புன்னகையும் மோகத்திலே சிந்துகின்ற
வாகனமே தேரேறி வந்திடுவாய் நிலவொளியே !
மாகனமோ உன்மேனி மாமகளே மறுக்காதே !
தாகமுமே தீர்த்திடவே தளிர்நடையாள் வாராயோ !!!
கண்களினால் சுமந்தேனே கனவுகளை நானுந்தான் .
எண்ணமெல்லாம் உன்நினைவே எடுத்தியம்ப வழியில்லை
வண்ணமிகு உன்னிடமே வரம்கேட்டு நிற்கின்றேன் .
பெண்களுக்குள் சிறந்தவளாம் பேர்வாழ்த்திப் பாடிடுக !!
நிலையில்லா உலகினிலே நிலைத்திடுமா உணர்வுகளும்.
மலைமலையாய் உன்நினைவு மறந்திடுமா என்னுள்ளம்.
களையிழந்த மதிமுகத்தாள் கண்களிலே கண்ணீரே !
சிலையாகி நின்றுவிட்டேன் சித்திரமே பாராயோ !
பாராயோ நீஎன்னை பார்த்துவிடும் தூரத்தில்
வாராயோ தேனிசையே வந்தருகே நில்லாயோ
சேராயோ என்னோடு சேர்ந்துவிடும் நாளருகில்
சீரான செவ்விதழால் சிந்துகின்றாய் சிரிப்பொலியை . !!
சிரிப்பொலியை நான்கேட்டு சிந்தையும் மயங்கி
உரித்தாக்கும் மோனநிலை உணர்வாயோ எனதழகே !
விரிவாக்கும் தனைநோக்கி விரைந்திடுமே காதல்தீ
பரிதாபம் வேண்டாமே பாசத்தால் காண்பாயே ! !
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்