விவேக சிந்தாமணி - செருப்பாலே அடிப்பவருக்கு

விவேக சிந்தாமணி - செருப்பாலே அடிப்பவருக்கு

பொருள் கிடைப்பது கடினம். கிடைத்த பொருளை என்ன செய்ய வேண்டும் ? அல்லது பெரும்பாலனோர் என்ன செய்கிறார்கள் ? வீடு வாங்குவது, மனை வாங்குவது, நகை நட்டு வாங்குவது, வங்கியில் போட்டு வைப்பது என்று ஏதோ செய்கிறார்கள். தங்கத்தின் விலை கீழே போகும். வட்டி விகிதம் குறையும். சில சமயம் முதலுக்கே மோசம் ஆகும். என்ன செய்யலாம் ?

பாடல்

பொருட்பாலை விரும்புவார்கள் காமப்பாலிடை மூழ்கிப் புறள்வர்கீர்த்தி
யருட்பாலர் மறப்பாலைக் கனவிலுமே விரும்பார்க ளறிவொன்றில்லார்
குருப்பாலர்க் கடவுளர்பால் வேதியர்பால்பு ரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே யடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்தீவார்.

பொருள்

பொருட்பாலை விரும்புவார்கள் = பொருள் சேர்ப்பதை விரும்புவார்கள்

காமப்பாலிடை மூழ்கிப் = காமத்தில் மூழ்கி
புறள்வர் = புரளுவார்கள்
கீர்த்தி = புகழ்
யருட்பாலர்= அருள்தரும்

அறப்பாலைக் = அறச் செயல்களை
கனவிலுமே = கனவில் கூட
விரும்பார்கள் = விரும்ப மாட்டார்கள்

அறிவொன்றில்லார் = அறிவில்லாதவர்கள்
குருப்பாலர்க் = நல்ல குருமார்களிடம்
கடவுளர்பால் = கடவுளிடம்
வேதியர்பால் = வேதியர்களிடம்
புரவலர்பால் = அரசனிடம்
கொடுக்கக் கோரார் = கொடுக்க நினைக்க மாட்டார்கள்

செருப்பாலே யடிப்பவர்க்கு = செருப்பால் அடிப்பவர்க்கு
விருப்பாலே = விருப்பமுடன்
கோடி = கோடி
செம்பொன் = உயர்ந்த பொன்னை
சேவித்தீவார் = வணங்கி தருவார்கள்

பணம் இருந்தால் முதலில் அதை வைத்து என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று பார்க்க வேண்டும். குருவிடம் தருவது என்றால் , வித்தை கற்றுக் கொள்ள பணத்தை செலவிட வேண்டும். வித்தை என்றால் ஏதோ பாடம் படிப்பது பட்டும் அல்ல. உடற் பயிற்சி கற்றுக் கொள்ளுவது, நல்ல உணவு முறைகளை கற்றுக் கொள்ளுவது, ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொள்ளுவது, நம் ஆளுமையை (personality ) முன்னேற்றக் கற்றுக் கொள்ளுவது, குழந்தை வளர்ப்பு, என்று பல விதங்களில் நம்மை உயர்த்திக் கொள்ள பணத்தை செலவிட வேண்டும்.

அடுத்து, கடவுளுக்கு தர வேண்டும். கடவுளுக்கு தருவது என்றால் ஏதோ கடவுள் பணம் இல்லாமல் நம்மிடம் கையேந்தி நிற்கிறார் என்று அர்த்தம் அல்ல. தர்ம காரியங்களுக்கு செலவிட வேண்டும்.

அடுத்து, வேதியற்கு. உயர்ந்த வேதங்கள், தேவாரம்,திருவாசகம், பிரபந்தம் போன்றவை யாரும் வாசிக்காமல் , பாடாமல் நாளடைவில் தேய்ந்து நலிந்து போகும். அவை வழக்கொழிந்து போனால் மிகப் பெரிய நட்டம் நமக்கும் நம் வருங்கால சந்ததிக்கும். அவை அப்படி அழியாமல் இருக்க வேண்டும் என்றால் , வேதியர்களை போற்றி, அவர்களுக்கு பொருள் கொடுத்து காக்க வேண்டும்.

அடுத்து, செல்வாக்கு உள்ளவர்களை பரிச்சியம் செய்து கொள்ள பணம் செலவிட வேண்டும். பெரிய இடத்தில் உள்ளவர்களின் தொடர்பு நமக்கு மிகுந்த நன்மையைத் தரும்.

அடுத்து, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை ஒழுங்காக செலுத்த வேண்டும்.

இப்படி எல்லாம் செய்யாமல் , கேளிக்கைகளில், மது, மாது என்று தீய வழிகளில் பணத்தை செலவிட்டால், பின் தீயவர்கள் சகவாசம் ஏற்பட்டு, அவர்கள் நம் பணத்தை நம்மிடம் இருந்து நம்மை துன்பப் படுத்தி பிடுங்கிக் கொள்வார்கள்.

யோசித்துப் பாருங்கள், உங்கள் வருமானத்தில் எவ்வளவு சதவிகிதம் எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று.

சம்பாதிப்பது மட்டும் அல்ல , சரியான வழியில் செலவழிப்பதும் ஒரு கலை.

அதையும் கற்றுக் கொள்ளுங்கள்.

விவேக சிந்தாமணி உங்களை அந்த திசையில் சிந்திக்க தூண்டுகிறது.

சிந்தியுங்கள்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (17-Feb-17, 10:18 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 204

மேலே