ஆதி சிவனே

ஆதி சிவனே
யாம் கொண்ட இப்பிறப்பு
தாம் ஈன்ற பிச்சையென
தாமதமாய் யாம் உணர்ந்தோம்
ஆதி சிவனே
நீ வேறு யாம் வேறு
குடி கொண்ட பொருள் வேறு
என்று திரிந்த கூட்டம்
எம் வேரு நீ என்று
மனம் உழும்
அருள் ஏரு நீ என்று
மெய் கண்டே வேண்டி நின்றோம்
ஆதி சிவனே
அரசாட்சி புரிந்தாலும்
பரதேசியென திரிந்தாலும்
ஆடவராய் பெண்டீராய்
இரண்டுமாய்
திரிந்து முடித்து
கடைசி மூச்சடங்கி
கதி என்று சேருமிடம்
ஆதி சிவனே
ஆடிடும் வாழ்வதனில்
சேர்ந்திடும் பாவங்களை
கழுவி கரைசேர
சற்றே தலை சாய்ந்தால்
வழிந்திடும் கங்கையில்
முழுவதும் மூழ்கியே
மூர்ச்சையாகிட வழிதருவாய்
ஆதி சிவனே
கரு வழியே புவியிரங்கி
கண்ட பயன் போதுமென்றே
மண்ணோடு புதைந்தேனும்
கனலோடு கலந்தேனும்
உடலெனும் கூடுவிட்டு
உன்பாதம் சரணடைய
வரமருள்வாய்
ஆதி சிவனே