பொன்னாடையும், மலர்செண்டும், பிணப்பெட்டியும்
(ஒரு உருவகக் கதை)
“சாந்தி” ஒரு பிரபல்யமான கடை. இறுதியில் மனிதனின் ஆன்மா சாந்தி பெறுவதை நினைவூட்டும் பெயர். பொன்னாடை, மலர்வளையம், பிணப்பெட்டி போன்ற முக்கியப் பொருட்களை ஈமச் சடங்கு நிகழ்வுக்காக விற்பனை செய்யும் கடை. குறுகிய நேரத்தில் தாங்கத்தக்க விலைக்கு ஏற்றவாறு வாங்கக்; கூடிய கடையாதலால், வாடிக்கையாளர்களுக்குக் குறைவில்லை. கடையின் விற்பனை பகுதியில் பொன்னாடை, மலர்வளையம், பிணப்பெட்டி ஆகிய மூன்றும், அன்று நடக்கவிருக்கும் ஒரு தனவந்தரும், அரசியல்வாதி ஒருவரின் ஈமச் சடங்;கு நிகழ்வுக்குப் போவதற்கு தம்மைத் தயார் செய்து கொண்டு இருந்தன. அவர்களிடையே நடக்கும் உரையாடல் தான் இது.
பிணப்பெட்டி: என்ன நண்பர்களே என்னிடம் இருந்து சந்தன மணம் வீசுகிறதா. நான் ஒரு பிரபல்யமான அரசியல்வாதியும் தனவந்தர் ஒருவரின் உடலை சுமக்கப் போகிறேன்;. அவரின் கட்சி ஆதரவாளர்கள் பெரும்; பணத்தொகை செலவு செய்து சந்தன மரத்தால் செய்த பிணப்பெட்டி வேண்டும் என்று என் முதலாளியிடம் கேட்ட படியால் என்னை அவர் தயார் செய்தார்;. அது மட்டுமல்ல இறந்தவரின் பெயர், அவர் பெற்ற பட்டங்கள் . கட்சியில் அவர் தலைவரென்பதால் பெட்டிக்கு வெளியே எல்லோரினது பார்வைக்ப் படும் படி
செய்யப்பட்டேன்.
மலர்வளையம்:; நீ மாத்திரமே சுகந்த மணம் உள்ளவன் என்று பெருமைப்படாதே. நூன் கூடத்; தான் சுகந்த மணம் வீசுபவன்;. இறந்தவரின் கட்சிக் கொடியின் நிறத்தில் உள்ள மலர்களால் உருவாக்கப்பட்டவன். அவரின் பெயரும், அவர் வகித்த பதவியையும்;, கட்சிப் பெயரையும் எழுதிய லேபல் என்ற முகப்புச் சீட்டையும் சுமக்கிறேன். என்னோடு என் தம்பியும் கூடவே இருக்கிறான்.
பிணப்பெட்டி: உன் தம்பியா? புரியவில்லையே. கொஞ்சம் விளக்கமாகத் தான் சொல்லேன்.
மலர்வளையம்: நான் சொல்வது ஆறடி நீளத்துக்குத் தயாரிதடத ரோஜாப்பூ மல்லிகை, செவ்வந்தி போன்ற பூக்கள் கலந்த மலர் வளையம். இதைத் தான் அவரின பிரேதத்தின் அருகே வைக்கப்போகிறார்; கட்சியின் பொதுச் செயலாளர்.
பொன்னாடை: நீங்கள் உங்கள் சுகந்த மணத்தைப் பற்றி பெருமையாகப் பேசுகிறீர்களே, எனது தங்கச் சரிகை வைத்து காஞ்சிபுரப் பட்டில்; உருவாக்கப்பட்ட நான் எவ்வளவு பெறுமதியம் அழகும் வாய்ந்தவன் என்பது உங்களுக்குத் தெரியுமா. எனது நிறமும்; கட்சிக் கொடியின் நிறத்துக்குப் பொருத்தமாக அமைய வேண்டும் என்பது கட்சிக்காரர்கள் முதலாளியிடம் இட்ட கட்டளை. அதனாலை பிரத்தியேகமாகக் குறுகிய காலத்தில் தாயரிகப்பட்டவன் நான்.
பிணப்பெட்டி: அதுசரி எனக்கு மேல் கண்ணாடி மூடிப் போட்ட பாதுகாப்பு இருக்கிறதைக் கவனித்தீர்களா? அது ஏன் தெரியமா?
மலர்வளையம்: நீ சொன்னால் தான் எங்களுக்குப் புரியும்
பிணப்பெட்டி: எனக்குள் அடங்கப்போகும் அரசியல்வாதி ஆட்சியில் இருக்கும் போது அவரது போஸ்டர்கள் சாணத்தால் எதிர்க்கட்சியினால் அலங்கரிக்கப்பட்டன. அதுவுமில்லாமல் அவர் பேசிய கூட்டத்தில் கற்களும் செருப்பும் எறியப்பட்டது. அது போன்று ஒன்றும் அவர் உடலுக்கு இறந்த பின்னர் நடக்கக் கூடாது என்பதற்காகக் கண்ணாடி மூடியால் பாதுகாத்து இருக்கிறார்கள். ஒருவரும் ஊரிலை செய்வது போல் உடலைத் தொட்டு ஒப்பாரி வைக்க முடியாது.
பொன்னாடை: ஒப்பாரியா? அதென்ன? கொஞ்சம் விபரமாய் தான் சொல்லேன்.
நான் ஈமச்சடங்குகளில் இறந்தவரின் பெருமையைப் பற்றி பேச்சாளர்கள் பேசுவதைத் தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..
பிணப்பெட்டி : தாய், தந்தை, கணவன், பிள்ளை, உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்பஉணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது. இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறிய முடியும். ஒப்பாரிப் பாடல்களின் இசை, விளம்பமும் மத்யமும் கலந்த ஒரு லய அமைப்பில் முகாரி, ஆகிரி முதலான இராகச் சாயலுடன் விளங்குகின்றது.
மலைர்வளையம்: எனக்குச் சினமா பாடல் கேட்டு அலுப்புத் தட்டிப் போச்சு ஒரு ஒப்பாரியைத்தான் கேட்போமே. உனக்குத் தெரிந்தால் ஒரு ஒப்பாரியைப் பாடேன்.
பிணப்பெடடி : ஒரு மனைவி தன்றை புருஷன் மறைந்ததுக்கு வைத்த ஒப்பாரியைப் பாடுகிறேன் கேளுங்கள்
“ஆலமரம் போல அண்ணாந்து நிப்பேனு
நான் ஒய்யாரமா வந்தேனே
இப்ப நீ பட்ட மரம்போல
பட்டு போயிட்டையே.
பொட்டு இல்ல பூவில்லை
பூச மஞ்சளும் இல்ல
நான் கட்டன ராசாவே
என்ன தனியாக விட்டுத்தான் போனிங்க.
பட்டு இல்லை தங்கம் இல்லை
பரிமாற பந்தல் இல்ல
படையெடுத்து வந்த ராசா
பாதியியில போரிங்க்கலே
நான் முன்னே போரேன்
நீங்க பின்னே வாருங்கோ
என சொல்லிட்டு
இடம்பிடிக்கப் போயிதங்களா.
நான் காக்காவாட்டும் கத்தரனே,
உங்க காதுக்கு கேக்கலையா
கொண்டுவந்த ராசாவே
உங்களுக்குக் காதும் கேக்கலையா.
நான் கேட்ட நேரமெல்லாம்
ஆயிரம் ஆயிரமாய் தந்தனீங்கள்.
தங்கம் வைரமாய் எனக்குப் போட்டினீங்கள்
பினாமியில் ஊர் முழுவதும்
காணிகள், வீடுகள் வாங்கினீங்க
இப்ப அவை அரசு எடுக்கப் போகுதே
நான் என்ன செய்ய என் ராசாவே?
பொன்னாடை : நீ பாடிய பாடல் என் மனதை உருக்கிறது. அழுகை வரும் போல் இருக்கிறது. அரசியலும் கலந்து இருக்கிறது. கடைசி சில வரிகள் உன் கற்பனையா
பிணப்பெட்டி: இப்படி வந்திருப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரும் படி எல்லோராலும் சோகக் குரலில் பாடமுடியாது. இதற்குகென ஒப்பாரி பாடி அனுபவம் வாய்ந்த கூலிக்கு மாரடிப்போர் உண்டு. ஒரு கிராமத்துக்கென தனிப்பட்ட கூட்டம் அது. கொடுக்கிற கூலிகட்கு ஏற்றவாறு பாடுவார்கள். நாலைந்து பேர் சுற்றியிருந்து கட்டிப்பிடித்துப் பாடுவார்கள். நீலிக் கண்ணீர் வடிப்பார்கள். கிளிசரினை கூடச் சில சமயம் அழுகை வரப் பாவிப்பார்கள். இனத்;தவர்களைக் கண்டதும் தம் குரலை உயர்த்தி ஒப்பாரி வைப்பார்கள் பாடும் போது தமது இறந்த கணவனையோ பிள்ளையையோ நினைத்துப் பாடுவதால் அவர்களுக்கே அழுகை வந்துவிடும். கூலி வாங்கி ஒப்பாரிவைக்கும் அவர்களுக்கு இறந்தவர் பற்றி விபரம் தெரியாது.
மலர்வளையம்: கிராமத்து இலக்கியம் இன்னும் மறையவில்லை போல. பேச்சாளர் இறந்தவரைப் பற்றி பேசும் போது பீதாம்பரம் என்ற என்னை தங்களுக்குப் போர்த்தி பேச வைப்பார்கள் என நினைப்பார்கள். ஆனால் அந்தப் பொன்னாடை இறந்தவரின் உடலுக்கு மாலை போட்டு, பொன்னாடையால் போர்ப்பார்கள். பாவம் நன்றி சொல்ல முடியாத நிலை அவருக்கு.
பிணப்பெட்டி: அதசரி திரு பீதாம்பரம் உம்மை முக்கிய புள்ளிகளுக்கு போர்ப்பதன் அர்த்தம் என்ன?
பொன்னாடை: பீதாம்பரம் என்று பெருமையாக அழைக்கப்படும் நான் வடமொழியான சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டவன். பீதம், அம்பரம் என்று எனப் பெயரைப் பிரித்தால், பீதம் என்பது தங்கவண்ணம் என்றும் அம்பரம் என்றால் துணி என்றும் பொருள்படும். தோள்களைச் சுற்றிப் போர்த்துக் கொள்ளவோ அல்லது இடுப்பில் கட்டிக்கொள்ளவோ பயன்பட்ட பட்டுச் சேலையிலான துணி. தற்காலத்தில் பொன்னாடை என்று பரவலாகப் பேசப்படுகிறது. தங்க இழைகளைக் கலந்து நெய்திருப்பர். அல்லது துணிக் கரையாவது தங்கம் கலந்து நெய்யப்பட்டிருக்கும்...மொத்தத்தில் இந்தத் துணி தகதக என்று மின்னியபடி மிகக் கவர்ச்சிகரமாக இருக்கும்...விசேட நாட்களில் பயன்படுத்தினர்...இந்து மதத் தொடர்பான காரியங்களைப் பட்டாடை, பீதாம்பரம் அணிந்துச் செய்வது சிறந்த பலனைக் கொடுக்கும் எனக் கருதப்பட்டது...பொன்னாடை(பீதாம்பரம்) போர்த்திப் பொற்கிழியும் வழங்குதல் பண்டைக் காலத்தில் மன்னர்கள் புலவர்கள் முதலானோருக்குச் செய்த மரியாதையாகும்.
மலர்வளையம்: இந்த நிகழ்ச்சியில் பேசும் பேச்சாளர்கள் சிலர் சிலேடையாக பேசுவார்கள். நான் கேள்விப்பட்டேன் அண்மையில் இறந்த தமிழ்நாட்டு முதல் அமைச்சர்; மரணத்துக்கான இரங்கல் செய்திகளில் கவனத்தைக் கவர்ந்தது வரிகள் 'சந்தியாவின் மகளாகப் பிறந்தவர் இந்தியாவின் மகளாக இறந்தார்'. 32 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி படுகொலை செய்யப் பட்டபோது தமிழ் வார இதழ் ஒன்று அட்டையிலேயே அவருக்கான அஞ்சலிக் 'கவிதை'யை வெளியிட்டிருந்தது. அந்தக் 'கவிதை' இப்படி முடிந்தது: 'பிரியதர்சினி உன்னையும் பிரிய நேர்ந்ததே'. இந்திரா காந்தியின் முழுப் பெயர் இந்திரா பிரியதர்சனி என்பது இங்கு நினைவுகூரத் தக்கது.
பொன்னாடை. அதெல்லாம் சரி நாங்கள் எல்லோரும் இறந்தவரோடு உடன்கட்டை ஏற வேண்டியது தானா”? எங்களுக்கு அஞ்சலி செலுத்த ஒருவரும் இல்லையா?.
பிணப்பெட்டி: சத்தம் போட்டு பேசாதே அதோ இறந்தவரின் கட்சியாளர்கள் வந்துவிட்டார்கள் எங்களைக் கூட்டிப்போக. இது நாம் மனித இனத்துக்குச் செய்யும் சேவையாக இருக்கட்டுமே.
*******