புதியதோர் உலகு செய்வோம் - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

புதியதொரு உலகினையும் படைத்திடவே
------ புதுமைகளும் நன்னெறியும் சேர்ந்திடவே !
பதியுங்கள் இக்கருத்தை அனைவருக்கும்
------ பண்பான நீதிநெறி ஓங்கிடவும்
கதியாகப் பற்றிடுங்கள் நெறிமுறையை
------ காலத்தால் அழியாத காவியமே !
மதித்திடுங்கள் சான்றோரை எந்நாளும்
------- மலரட்டும் புத்துலகும் காண்பீரே !


புதுவருடம் பொங்கட்டும் வாழ்வெங்கும்
------ புத்துணர்ச்சித் தங்கட்டும் எந்நாளும் .
புதுமைகளைச் செய்திடுவோம் புத்தாண்டில் .
------- பூக்கட்டும் பனிமலர்கள் எங்கெங்கும்
இதுவன்றோ வேண்டுகின்றேன் காசினியில்
------- இனிக்கட்டும் யாக்கையுமே நல்லறத்தால்.
எதுவந்த போழ்தினிலும் கலங்காதீர் .
------- ஏற்றமிகு சிறப்பெல்லாம் வந்துசேரும் .



ஒற்றுமையே ஓங்கிடவே வேண்டுமென்பேன் .
------- ஒர்குலமாய் வாழ்தலுமே வேண்டுமென்பேன் .
கற்றவர்கள் கல்லாதான் மனைசென்று
------- கல்விதனைக் கற்பித்தல் வேண்டுமென்பேன் .
உற்றவராய் நாட்டினிலும் உலவவேண்டும் .
-------- உன்னதமாய் தமிழ்மொழியே ஆளவேண்டும் .
பெற்றிடுவோம் செல்வமெலாம் மீமிசையில்
------- பெருமைபல சேர்ந்திடுமே புத்துலகில் .



வீடெங்கும் நன்னெறிகள் மலர்ந்திடவே
------- விந்தைபல செய்திடுவோம் நாளும்நாம் .
ஏடெடுத்து இயம்பிடுவேன் இதனைநானும்
------- எவ்வுயிரும் சோதரராய் எண்ணிடுவோம் .
ஓடெடுத்து நில்லாதீர் மானிடரே
------- ஒர்ந்திடுவீர் ஒற்றுமையைப் போற்றிவாழ .
நாடாளும் நிலைவருமே புத்தாண்டில் .
------- நாடெங்கும் பூக்கட்டும் சந்தோசம் .



ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் ( மரபு கவிதை )
திருச்சி , தமிழ்நாடு , இந்தியா .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Feb-17, 9:56 pm)
பார்வை : 67

மேலே