எதிர்கால கனவுகள்

எதிர்கால கனவுகள் ! கவிதை

அன்பு என்னும் மலர் மலர்ந்து
அமைதி எங்கும் பரவ வேண்டும்
ஆன்மீக அன்பர்கள் ஒன்று கூடி
மனிதநேயம் வளர்க்க வேண்டும் !

இன்னா செய்தாரையும் மறக்காமல்
புன்னகையுடன் வரவேற்று
ஈன்றவளைத் தெய்வம் என
எப்போதும் நினைக்க வேண்டும் !

உண்மைத் தன்மை உணர்ந்து
வாழ்வில் உயர்வு பெற வேண்டும்
ஊனம் கண்டு வெறுக்காமல்
நல்லுறவோட பழக வேண்டும் !

எவ்வுயிரும் தம் உயிர்போல்
நினைக்கும் உள்ளம் வேண்டும்
ஏற்றமிகும் பாரதம் என
எங்கும் பேசப்பட வேண்டும் !

ஐயம் தெளிவுபட நல்ல
கல்விமுறை வர வேண்டும்
ஒற்றுமை எங்கும் நிலவி
ஒருமைப்பாடு வளர வேண்டும் !

ஒளவை மொழி அமுத மொழி
அனைவரும் உணர வேண்டும்
எ.;.கு போல் வீரம் செறிந்த
இளைஞர்கள் உருவாக வேண்டும் !

விளை நிலம் வீடுகளாவதை
களையெடுத்து விவசாயமே
நம் நாட்டின் உயிர் மூச்சு
எதிர்கால கனவு பலிக்க வேண்டும் !

செயற்கை உரத்திற்கு விடைகொடுத்து
இயற்கை உரங்களை வரவேற்று
பாரதம் எங்கும் பசுமை காண
பசுமைப் புரட்சி எழ வேண்டும் !

இலவசத்திற்கு சமாதி கட்டி
இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற
நல்ல தொழிற்சாலைகள் உருவாக்கி
நம்பிக்கை விளக்கேற்ற வேண்டும் !

உழவையும் கைத்தொழிலையும்
மதிக்க வேண்டும்
வீணில் உண்டு களிப்போருக்கும்
உழைப்பின் பெருமையை
உணர்த்த முயல வேண்டும் !

மது இல்லாதத் தமிழகம்
மது இல்லாதப் பாரதம்
மக்களின் எதிர்காலக் கனவுகள்
நிகழ்காலத்திலே பலிக்க வேண்டும்.!

அன்பு என்னும் விதையைத் தூவி
பண்பு என்னும் நீரைப் பாய்ச்சி
ஆன்மீகம் என்னும் உரமிட்டு
மனிதநேயம் வளர்க்க வேண்டும் !

எழுதியவர் : பூ,சுப்ரமணியன் (5-Mar-17, 7:42 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 2197

மேலே