உடல் - தரவு கொச்சகக் கலிப்பா - மரபு கவிதை

அண்டத்தின் கீழ்நாமும் அரசாட்சி செய்கின்றோம்
உண்ணுகின்ற சோற்றுக்கும் உறவுகளுள் சண்டையிடும்
மண்ணுலகில் வாழ்கின்ற மானிடரின் உடல்தானும்
மண்ணுள்ளே புதையுறுமே மடிந்தபின்னே அழிந்துவிடும் .


வான்வெளிக்குப் போகின்றோம் வடிவமுமே உருக்குலைந்தே
கான்மரங்கள் அழிக்கின்றோம் கட்டிடங்கள் உருவாக்க
மான்துள்ளல் ஈங்கில்லை மலர்வாசம் இனியில்லை
தான்நோக்கும் போக்கினாலே தரமான வாழ்வில்லை.


உடலுள்ளே இருக்கின்ற உயிர்தானே ஆன்மாவும்
கடலாழம் காண்கின்றோம் கரைசேர வழியில்லை
உடலெங்கும் எரியூட்ட உறவுகளும் சூழ்ந்திருக்கப்
படகோட்டி இல்லாது பரிதவிக்கும் குடும்பமுமே !


உடல்மேலே உயிர்வந்தே ஒன்றுவதே இயல்பென்பார்
மடல்களுமே வனைந்திடுவர் மரித்திட்டச் சேதிசொல்ல .
விடலைபோலே மண்மீதில் விளையாடும் நிலைமாறிக்
கடலலைபோல் வந்துவந்து கரைசேரா நிலையாவார் .


அழிந்திடுமே உடல்தானே ஆனாலும் ஆசையினால்
ஒழிந்திடுவார் இவ்வுலகில் ஒன்றாது வாழ்வினிலே
வழிந்தோடும் செல்வத்தை வறியார்க்கு ஈதலின்றிப்
பழிவாங்கும் மக்களினம் பாவத்தைச் சேர்த்திடுவார் !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Mar-17, 9:39 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 65

மேலே