என் பிள்ளைகள்-ஒரு நிமிடக்கதை

ஒரு தந்தைக்கு 4 குழந்தைகள். அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டுமென்று ஒரு குகையில் 100 ஆண்டுகள் தவம் புரிய வேண்டும் ஆதலால் தன் பிள்ளைகளை அப்படியே விட்டுச் செல்ல நேர்ந்தது ,ஆனால் அவர் திரும்பி வரும் வரை வீட்டினை அப்படியே பார்த்துக்கொள்ள அவர்களுக்கு எந்தெந்த பொறுப்புகளை கொடுப்பது என்று ஒரு சிறிய குழப்பம். பின் அவர்களின் குணாதியசங்களை வைத்து அந்த நால்வரையும் இந்த வீட்டினை தான் வரும் வரை எவ்வாறு காப்பது என்பது தீர்மானித்து தன் பிள்ளைகளுக்கு பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்தார் பின் வருமாறு.

நால்வரில் ஒருவனுக்கு அறிவோ கொஞ்சம் அதிகம் மற்ற 3 பேரை விட.அதனால் அவனுக்கு நல்ல கல்வி கிடைத்திட வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தார்,அவனோ தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி மிகப் பெரும் அறிவுக்கூர்மை மிக்கவனாய் வாழ்ந்து வந்தான். அவனுடைய தந்தை அவனை அந்த வீட்டின் அறிவு சார்ந்த வேலைகளை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டார்.

பின் இன்னொரு மகன் மிகப்பெரிய வீரன் அவனுக்கு கல்வி அந்த அளவுக்கு இல்லை,அவனோ தன் வீரத்தை மட்டும் நம்பி இருந்ததால் அவனுக்கு அவர் தன் வீட்டை பாதுகாக்கும் பொறுப்பினை கொடுத்தார்.

அடுத்து இன்னொரு மகனுக்கு அவனுடைய வியாபாரதிறமையினால் அவனை அந்த வீட்டின் பொருளாதார முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் விட்டுவிட்டார்.

அதற்கடுத்து இன்னொரு மகன் நன்றாக வேலை செய்வான் வயல்வெளியிலும் மற்ற இடங்களிலும். அவனுக்கு வீட்டிற்கு தேவையான உணவுப் பொருள்களை தயார் படுத்தும் வேலையையும் வீட்டின் பராமரிப்பு பணியையும் பார்த்துக் கொள்ளும்படி பனித்துவிட்டுச் சென்றார் அவர்களின் தந்தை.

250 ஆண்டுகள் கழித்து தன் பிள்ளைகளின் தலைமுறைகளை காண ஆசையாய் தன்னுடைய வீட்டிற்கு வருகிறார் தன் வாழ்வுப் பயனை அடைந்ததாய் நினைத்து.

அறிவில் சிறந்தவன் மீதி உள்ள மூவரையும் தன் அறிவுக்கூர்மையால் அவர்கள் இவனை விட தாழ்ந்தவர்கள் என்று சொல்லி அவர்களை தனக்கு கீழ் தன் கட்டுப்பாட்டில் வைக்க வீரத்தில் சிறந்தவனோ தன்னை அடுத்த நிலையில் நிலை நிறுத்தி தனக்கென ஒரு வீட்டினையும் ஏற்படுத்தி அவனோடு கூட்டு சேர்ந்து தனக்கு கீழ் உள்ள இருவரையும் கட்டுப்படுத்தி அடிமைப்படுத்தி அவர்களுடைய உழைப்பில் வாழ்ந்து வந்தான் தலைமுறை தலைமுறையாய்.

இவைகளை கண்ட அந்த தந்தை தன் பிள்ளைகளுக்கு தான் இழைத்தது எவ்வளவு பெரிய கொடுமை என்று புரிந்தது. தன் நான்கு பிள்ளைகளின் தலைமுறைகளும் இவ்வாறு ஏற்றத் தாழ்வுகளோடு வளர தானே காரணமாய் ஆனதை நினைத்து தான் தவிமிருந்து பெற்ற நீண்ட ஆயுளை முடித்துக்கொண்டு தன் கண்களை மூடிக்கொண்டார்.

இருப்பினும் அந்த தந்தை மீண்டும் உயிர் பெற்று தன் பிள்ளைகளில் ஒருவனான உழைப்பாளியின் தலைமுறையில் பிறந்து தன்னால் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வினை நீக்கிட மிகப்பெரும் போராட்டங்கள் மூலம் தன் பிள்ளைகள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் சரி வர கிடைக்கப் போராடி போராடி தன் சந்ததிகளிடமே தோற்றுக் கொண்டே இருந்தான்,ஆனாலும் அவன் தன் முயற்சியினை கைவிடாது தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறான் இன்று வரை அந்த மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டே....

எழுதியவர் : தொலைந்தவன் எ (சதிஷ் குமார் (10-Mar-17, 7:08 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 609

மேலே