உருகும் இதயத்தில் உயிரோவியமாய் நீ ---- மரபு கவிதை --- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உருகுகின்ற இதயத்திலே நீயன்றோ
------ உயிரோவி யமாகவன்றோ இருக்கின்றாய் !
பெருகுகின்ற மோகத்தால் காதல்மழை
------- பெய்திடுமோ என்முன்னே நீசொல்வாய் !
அருமையான நெஞ்சத்தில் கண்மணியே
------- ஆதிக்கம் நடத்துகின்றாய் என்னுள்ளே !
பெருமிதமாய் நினைக்கின்றேன் நானுந்தான்
------- பேருவகை கொள்கின்றேன் உனையெண்ணி !!
காதலுமே என்மனத்தில் வந்திடவும்
------ காதலுடன் மடலொன்றை எழுதுகின்றேன்
மோதலுமே விடுத்திடுவோம் நமக்குள்ளே
------ மோகமுள்ளே நீவாராய் என்னருகில்
நோதலின்றி வாழ்ந்திடலாம் எந்நாளும்
------- நோயான பசலைக்கும் மருந்தாவாய் !
சாதலுக்கும் மாற்றாக என்காதல்
------- சத்தான ஆணிவேராம் சாற்றுகின்றேன் !
எழுதுகின்ற கோல்கொண்டே இதயத்தை
------ என்னவளாம் உனக்கெழுத அமர்ந்தவேளை
எழுதுகோலும் நடுங்கியதே நாணத்தால்
------ எப்படிநான் எடுத்துரைக்க என்மனத்தை.
பழுதுபடாக் காத்திட்ட இதயமிதுப்
------- பக்குவமாய்ப் பாதுகாப்பேன் உயிராக !
தழுவிடுவேன் இதயத்தை உனைநினைத்தே
------- தந்திடுவாய் மறுமொழியும் காதலுடன் !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்