வாழ்க்கை வரமா பாரமா

மனிதப் பிறவியே கிடைத்தற்கரிய வரம்.
வனிதமாக வாழ்ந்தால் பாரமற்ற வரம்.
அனிதமானோரின் வாழ்வு அவலமாவதால் பாரம்.
இனிதாய் அழகாக்குதல் அவரவர் தீரம்.
எண்ணம் சிறக்கச் சிறக்க மனவானம்
வண்ணச் சுடர் அடர்ந்து விரிக்கும்.
திண்ணமாய் உயர் தாக்கம் பெருகும்.
நண்ணும் நிறைவுடை வாழ்வின் தரம்.
அத்தனை அனுபவங்களும் எம் நன்மைக்கே
உத்தம சிந்தனையாயிதை மனதில் எடுத்தே
கொத்தும் பொறாமை வன்மங்களைத் தொலைத்தே
சித்தம் குளிர வாழ்தல் வரமே.
பெற்றோர் உடன் பிறப்பைப் பேணியும்
சுற்றம் சூழ வாழ்தல் வரம்.
பற்றாம் பாசமறுத்து வாழ்தல் பாரம்.
கற்றிடும் யோகா விலக்கும் பாரம்.
வாசிக்கும் வாகான நூல்கள் மன
பாசி விலக்கும். அறிவு தனம்.
கூசிடாது நெருங்கும் வாழ்கை நந்தவனம்.
பேசிடும் வரமாயமையும் இல்லையொரு பாரம்.
தன்னம்பிக்கை, முயற்சி, மகிழ்வு, தானம்
நன்னம்பிக்கையாய் கையிலெடு! வாழ்வு கானம்!
இன்னமுத அருளாகும் வாழ்க்கை தேனாம்.
என்னாளும் பாரமற்ற வரம் ஆனந்தவனம்.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்
5- 2016