அவள் ஒரு தொடர்கதை
மணம் கமழ்ந்திடும் மலர்ந்த தாழம்பூவாய்
பணம் என்பதை பகையாய்க் கொண்டு
மணமேடை ஏறிடாது மதிலுக்குள் அடைந்து
கணநேரப் பொழுதும் கவலையில் மூழ்குகிறாள்......
வறுமையின் நதியில் வாழ்வினை நனைத்து
குறுநகை எழிலை குழந்தையில் தொலைத்து
சிறுதுளி அளவும் சந்தோசம் இல்லாது
கறுப்பு தேகத்தைக் கண்ணீரில் கழுவுகிறாள்......
கருமுகில் வெளுத்த குழலினை முடிந்து
தெருவின் பாதையில் தலையும் நிமிராது
வருந்தும் மனதும் வதையும் கோலத்தில்
நெருப்பில் படரும் நீள்கொடியாய் வாழ்கிறாள்......
அடுப்பில் கொதிக்கும் அனல்மிகு உலையில்
நடுங்கும் இதயத்தை நீராட வைக்கிறாள்
கடும்புகைப் படிந்த கன்னத்தின் குழியில்
நெடுநாள் பயணம் நினைத்து புதைகிறாள்......
தனிமையின் வேதனையில் தவிக்கின்ற நொடியில்
அனிச்சம் பூவிழுந்து அங்கம் துடிக்கிறாள்
இனியொரு பிறவி இவ்வுலகில் வேண்டாமென்று
நுனிப்புல் பனியாய் நிதம் மரிக்கிறாள்......