பொய்த்திருநாள்

=================
தனக்கும் ஒருநாளை
மெய்யாகவே கொண்டாடும்
மக்களை எண்ணி
பொய்யும் மனம் மகிழக்கூடும்
எப்போதும்
காதலியிடமும் மனைவியிடமும்
பொய்களை மட்டும்
பரிசளிக்கும் கனவான்கள்
இன்று உண்மையை பரிசளித்தாலும்
அது பொய்யாகவே முடிந்துவிடும்
வாய்க்கூசாமல்
வெண்மையைக் கறுப்பென்று
விற்பனை செய்யக் கற்றுக்கொண்ட
வியாபாரியிடம் பொய் இன்று
தன்னுடைய பிறந்தநாளைக்
கொண்டாடக்கூடும்
ஐந்து வருசத்திற்குப் போதுமான
பொய்களை மேடைகளில்
மொத்தமாக வாக்குறுதிகளாய்
கொடுத்துப்போனவர்கள் தமது
தொழிலின் மூலதனத்திற்கு இன்று
ஆயுத பூஜை நிகழ்த்தலாம்
முப்போகம் விளைந்த மண்ணில்
இப்போகமாவது விளைவதற்கு
கருக்கட்ட மறுக்கின்ற மேகம்
பொய்பித்தலினூடே விவசாயியின்
வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி
விடுகின்றது மிக நீண்ட நாளாய்
வானம் மழையை பொய்ப்பிக்க
நதிகள் நீரை பொய்ப்பிக்க
வேளாண்மை அறுவடையை பொய்ப்பிக்க
வறட்சி வாழ்வையே பொய்யாக்கும்போது
நமது தைத்திருநாளாய்
நாளை ஒரு பொய் திருநாள்
இயற்கை நமக்காவும் கொண்டாடக்கூடும்