மாலை மாற்று மாலை - அறிமுகம் 1

பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் எங்கள் ஊர் சோழவந்தானில் 1868 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி பிறந்தார். அவ்வூர் தெற்கு ரதவீதியில் உள்ள சிதம்பர விநாயகர் கோயில் கல்மண்டபத்தில் இருந்த திண்ணைப் பள்ளியில் அழகர்சாமி தேசிகர் என்ற ஆசிரியரிடம் எழுத்திலக்கணம், நிகண்டு, அந்தாதி ஆகியன கற்றுத் தேர்ந்தார்.

பின்னர் அவ்வூரிலுள்ள பேட்டை, கிண்ணிமங்கல மடத்திலிருந்த சிவப்பிரகாச சுவாமிகளிடம் சங்க நூல்கள், இலக்கண இலக்கியங்கள், தருக்கம், சோதிடம் ஆகியன கற்றுப் புலமை பெற்றார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் 1890 முதல் 1901 வரை தமிழாசிரியராகப் பணி புரிந்தார். 1901 ல் தொடங்கப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையில் 1902 முதல் 1906 வரை சண்முகனார் பேராசிரியராகப் பணி புரிந்தார். இவர் தனது 47 ஆம் வயதில் 11.01.1915 ல் சிவபதமுற்றார்.

தமிழ் ஆர்வலரும், சண்முகாரின் புலமையின் மீது தீராத பற்று கொண்டவருமான, என் தகப்பனார் ’கன்ட்ரோல்’ C.கன்னியப்ப முதலியார் சோழவந்தான் ஊரில் ஸ்ரீ ல ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் மடாலய (கிண்ணிமடம்) அறங்காவலராயிருந்தார். அப்பொழுது 1981 ல் அவர், பெரும்புலவர் அரசஞ் சண்முகனாரின் பாடல்களான மாலை மாற்று மாலை, திருவடிப்பத்து, தோத்திரப் பாமாலை ஆகியவற்றை சுமார் 25 வருடங்களுக்கு முன் (1981ல்) இரண்டு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

மாலைமாற்று மாலை நூல் முதலில் யமக அமைப்பில் கலிவிருத்தமாக ஒரு காப்புச் செய்யுளும், மாலைமாற்றாக ஒரு காப்புச் செய்யுளும், நூலின் இறுதியில் ஒரு திரிபுச் செய்யுளும் நூலின் புறத்தே பெற்றும், நூலின் அகத்தே 30 செய்யுள்கள் அமைந்துள்ளன. முதல் செய்யுளில் காதைகரப்பாக இரண்டு செய்யுளும், கரந்துறையாக ஐந்து செய்யுளும் அமைந்துள்ளன. (37)

13 (கலிவிருத்தம்) 1. கோமுத்திரி, 2. கரந்துறை மாலைமாற்று (வஞ்சித்துறை),

14 (கலிவிருத்தம்) 1. கரந்துறை மாலைமாற்று (வஞ்சித்துறை), இதுவன்றி எழுத்தாவது, மொழியாவது சில மாறி பாடபேதமாக மூன்று செய்யுள்கள் உள்ளன. (5)

15. (வஞ்சி விருத்தம்) 1. மாலைமாற்றுக் கோமுத்திரி 2. நான்காரைச் சக்கரம், பிறிதொரு பாடமாக 2.

16 – 26 கலிவிருத்தம், 27 – 30 கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளன.

இவைகளிலுள்ள பாடல்களை ஆழமாக, திரும்பத் திரும்ப வாசித்து, என்னாலியன்ற அளவில் புரிந்து பொருளையும் தருகிறேன். எழுத்து தள வாசக அன்பர்கள் தங்கள் கருத்தையும் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (10-Apr-17, 11:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 163

சிறந்த கட்டுரைகள்

மேலே