சாதனை வேர்கள்

" சாதனை வேர்கள் "

வேகாத வெய்யில்னு சொல்றாங்க சென்னையிலே மனுஷனே வேகற வெய்யில், அப்படிப்பட்ட வெய்யிலில் போய் காய்கறிகள் , பழங்கள் , கருவேப்பிலை பச்சை மிளகாய் எலுமிச்சம் பழம், தொக்கு போட மாங்காய், தினசரி ஊறுகாய் போட மாங்காய், ஆவக்காய் மாங்காய் போட ஒரு வகை மாங்காய், அதைத்தவிர மாவடு, இஞ்சி எல்லாத்தையும் பாத்துப் பாத்து வாங்கி வியர்த்து வழிந்து அதைத் துடைக்கக் கூட முடியாமல் எல்லவற்றையும் உள்ளே கொண்டு வந்து வைத்தார் சபேசன்
அவர் மனைவி இந்தாங்க தண்ணீர் குடிங்க அப்பிடியே இந்த வியர்வையை துடைச்சிக்கோங்க ஜலதோஷம் பிடிக்கும் என்றபடி தண்ணீரை நீட்டினாள் .அதை வாங்கிக் குடித்துவிட்டு. அப்பாடா என்று நாற்காலியில் உட்கார்ந்தார் சபேசன்.

ஏங்க நம்ம ரெண்டு பேருக்கும் மாத்திரையெல்லாம் வாங்கினீங்களா என்றாள் அவள் அக்கறையுடன். ஆமாம்மா வாங்கிட்டேன். அப்பிடியே வாழையிலை வாங்கிட்டேன், நாளைக்கு வருஷப் பொறப்பு அதுக்காக, தேங்காய் வாங்கிட்டேன், எல்லாம் எனக்கு நியாபகம் இருக்கறவரைக்கும் வாங்கியாச்சு என்றார் பெருமூச்சுடன்.

அங்கே வந்த அவர் மகன் ஏம்பா இப்பிடிக் கஷ்டப்படறீங்க என்றான் ஆதங்கத்துடன். என்னப்பா செய்யறது நாம போனாத்தானே வாங்க முடியும் என்றவரைப் பார்த்து.
அப்பா சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க நானும் பொறந்து வளர்ந்ததிலேருந்து பாக்கறேன். இப்பிடியே அரிசி காய்கறி வாங்கியே உங்களுக்கும் 70 வயசாயிடிச்சு. ஆபீசுக்கு போவீங்க, வருவீங்க, எங்களுக்கு பள்ளிக்கூடத்துக்கு காலேஜுக்கு பணம் கட்ட வருவீங்க . நீங்க சொகமா இருக்கணும்னுதான் கார் வாங்கிக் குடுத்தேன். அந்தக் கார் கொத்தவால் சாவடிக்கு போயிட்டு வர லோடு வண்டி மாதிரி ஆயிப்போச்சு .

நீங்க கொத்தவால்சாவடியிலே காய்கறி மூட்டை ஏத்தற லோடுமேன் மாதிரி இருக்கீங்க என்ன செஞ்சாலும் சுகமா இருக்க உங்களாலே முடியலே, அம்மா இந்தக் காய்கறியெல்லாம் நறுக்கி சமைச்சு , ஊறுகாயெல்லாம் போட்டு அவதிப்படறாங்க. எல்லாம் சரி எப்போதான் நீங்க உங்க வாழ்க்கையை அமைதியா வாழப் போறீங்க? என்ன சாதிச்சீங்க வெளிநாட்டிலே பாருங்க ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் பிள்ளைங்களை வளர்த்துட்டு இனிமே மகனே உன் சமத்து அப்பிடீன்னு ஒதுங்கி அவங்க வாழ்க்கையை எஞ்சாய் பண்றாங்க .

நாமளும் காலத்துக்கு ஏத்தா மாதிரி மாத்திக்கணும், இதெல்லாம் காலம் காலமா செஞ்சிகிட்டே இருந்தாலும் தீராதுப்பா. வெறும் உழைப்புதான் மிச்சம். இதைத் தவிர நீங்க என்ன சாதிச்சீங்க. என்றான் மகன்.

இதமாக சிரித்துவிட்டு ஏம்பா நீ பெரிய இடத்திலே வேலை செய்யறே , கல்யாணமும் ஆயிப்போச்சு குழந்தையைப் படிக்க வைக்கிறே . உன் அக்காவுக்கும் உன் தங்கைக்கும் கல்யாணம் ஆகி அவங்களும் குழந்தை குட்டிகள்ன்னு வாழ்க்கையை நல்லா வாழறாங்க. எல்லாப் பேரன்களும் எங்களோட விளையாடறாங்க .இதோ கடையிஆ பொறந்த இந்தக் குட்டிப்பொண்ணு தாத்தா பாட்டின்னு எங்களையே சுத்தி சுத்தி வருது

ஏதோ இப்ப வரைக்கும் கடனில்லாமே இருக்கோம் ஆரோக்கியமா இருக்கோம், படுத்தா நிம்மதியா தூங்கறோம் ,மனசை பாரம் இல்லாம வெச்சிருக்கோம், உடம்புலே பாரம் சுமந்தாதான் மனசிலே பாரம் இல்லாம இருக்க முடியும். எங்க பேரன் பேத்தி எல்லாம் எங்களோட கொஞ்சறாங்க. நாங்களும் தூக்கிகிட்டு கொஞ்சி மகிழறோம் . தன் மக்கள் மழைச் சொல் கேளாதோர் அப்பிடீன்னு வள்ளுவர் சொன்னாமாதிரி வாழறோம் இதை விட என்னப்பா வேணும்.
நாங்க இப்பிடி வாழ்ந்தாதான் நீங்க நல்லா வாழமுடியும் . எப்பவுமே வேர் வெளியே தெரியாட்டாலும் மரத்தை தாங்கணும்ப்பா .நாளைக்கு உன்னோட நிலமையும் இதுதான்.அப்பிடித்தான் வாழணும்.
நாங்க ஒண்னுமே சாதிக்கலேன்னு நீங்கள்ளாம் நெனைக்கறீங்க இதை விட அதிகமான சாதனை வெளிநாட்டிலே இருக்கறவங்க கூட செய்ய முடியாதுப்பா . அவங்கல்லாம் குழந்தைகளோட பாசம் கிடைக்காம அவங்களைக் கவனிக்காம சுயநலமா வாழ்ந்துகிட்டு இருக்காங்க, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நம்மோட வாழ்க்கை முறைதான் சிறந்த முறைன்னு புரிஞ்சிகிட்டு வெளிநாட்டுக்காரங்க கூட இப்போ கூட்டுக் குடும்பமா வாழ ஆரம்பிச்சுட்டாங்க.என்றார் சபேசன்.

பேத்தி ஓடி வந்து தாத்தா என்னை உப்பு மூட்டை தூக்கறையா என்று முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டாள், அவளையும் தூக்கிக் கொண்டு எழுந்தார் சபேசன் அப்படியே மெல்லமாக உயர்வதை தன் அகலக் கண்களால் ரசித்த படி கலகலவென்று சிரித்தாள் பேத்தி. சபேசன் அப்படியே அவளைத் தூக்கிக் கொண்டு மனைவியிடம் போய் நின்றார், அவளைப் பார்த்து பாட்டி உப்பு மூட்டை வந்திருக்கு உப்பு வேணுமா என்றாள் பேத்தி, அவர் முதுகிலிருந்து பேத்தியை அப்படியே அள்ளிக் கொண்டு குட்டிப் பொண்ணு எங்கிட்ட கொஞ்சவே மாட்டேங்கறையே நாம விளையாடலாமா என்றாள் பாட்டி ( மனதுக்குள் தாத்தாவுக்கு முதுகு வலிக்கும் எங்கிட்ட விளையாடு என்று நினைத்துக் கொண்டு)

அந்த சாதனையாளர் அப்பாவையும் அம்மாவையும் பார்த்து பொறாமையே வந்தது மகனுக்கு

அன்புடன்
தமிழ்த்தேனீ

எழுதியவர் : தஃமிழ்த்தேனீ (12-Apr-17, 1:05 pm)
சேர்த்தது : thamizthenee
Tanglish : saathanai vergal
பார்வை : 372

மேலே