எழுச்சி பிறந்த தினம் ஏப்ரல் 14
போதும் போதும்
என்று முடங்கியபோது முடங்காதே அடங்காதே ஒடுங்காதே நடுங்காதே என எழுச்சியின் அறிமுகம் புரட்சியை வேரூன்ற கருப்பையைக் கிழித்து வெளிவந்த நாளன்றோ இந்நாள் ...
நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கு யாரும் அடிமையில்லை என முழக்கமிட்டு, குருதியில் சாதிவெறி கலந்த சாக்கடை பிறவிகளை மனிதரென மதிக்காமல் சமத்துவப்பொறி பாரினில் பரவ மூடர்கள் மூக்கின்மேல் விரல்வைத்து விம்ம அமெரிக்கா சென்ற முதல் இந்தியனல்லவா நீ...
தீண்டாமைத்தீயில் நீந்தி தன்மானமெனும் தனிக்கொள்கையேந்தி
கோவணங்கட்டியவனெல்லாம் மகாத்மா அல்ல என
காந்தியெனும் கட்டுவிரியனை தீப்பொறி மதியால் குலைநடுங்கவைத்த கோட்டுசூட்டு அணிந்த கட்டுக்கடங்காத வீரியனல்லவா நீ....
தடைக்கற்களாய் மடையர்கள் மல்லுக்கட்டியபோதும்
தொழில்நுட்பமின்றி மதிநுட்பத்தால் மாற்றத்தை வேட்கையுடன் விளைவித்த மாபெரும் சமூக விஞ்ஞானியல்லவா நீ....
மனிதயினமுள்ளவரை மனிதர்களால் மதிக்கப்படும் வரலாற்று மைல்கல்லல்லவா நீ...
தன்னை உயர்ந்த சாதியாகவும் பிறரை தாழ்ந்த சாதியாகவும் நினைப்போர் மனநோயாளிகளென மானுடம் செழிக்க மந்திரம்பல உரைத்த அடக்குமுறைக்கெதிராக நெஞ்சுயர்த்திய திமிரல்லவா நீ...
அன்றும் இன்றும் என்றும் எங்களுக்கான இருட்டைத் துடைக்கும் எழுஞாயிறல்லவா நீ..
உன்வழி பயணிக்கும் புரட்சியாளர்களிடத்திலும்
எழுச்சியாளர்களிடத்திலும் இறக்காமல் வாழ்வாய் நீ...
தீண்டாமைத்தீயை வேரோடு கருவறுக்க மீண்டுமொருமுறை பிறப்பாய் நீ....