இரண்டு இதயங்களின் சங்கமம் --- அறுசீர் விருத்தம்
இரண்டு இதயங்களின் சங்கமம் --- அறுசீர் விருத்தம்
வஞ்சி யுனையும் வர்ணிக்க
----- வகையாய்ப் பாட முன்வந்தேன் .
கொஞ்சி பாடும் குரலினிலே
------ கொள்ளை கொண்டாய் கண்மணியே !
விஞ்சி நிற்கும் காதலினால்
------ விண்மீன் புவியில் வீழ்ந்திடுதே .
பஞ்சு போன்ற இதயத்தினால்
------ பார்வை என்மேல் வீசுகின்றாய் .
கண்கள் பேசும் காதல்மொழி
----- கசக்கி நெஞ்சைப் பிழிகிறதே .
மண்ணில் வாழும் நம்காதல்
----- மகிமை தன்னைப் பெற்றுவிடும் .
பெண்ணின் பார்வை புரியாமல்
------ பேசா நிலையைத் தந்துவிட்டாய் .
பண்கள் பாடி மகிழ்வித்து
------ பாசம் தன்னை செப்பிடுவேன் .
உன்றன் பெயரே உள்ளத்தில்
----- உருகும் நிலைமைத் தெரியாதா ?
என்றன் நெஞ்சில் வாழ்பவளே .!
----- எவரு மறியாத் தேனிசையே !
மன்றில் நீயு மெனக்கெனவே
----- மங்கா அழகாய்ப் பிறந்துவிட்டாய் .
நன்றி பலவும் சொல்லிடுவேன் .
------ நம்மின் காதல் நிறைவேறும் .
இதயக் கூட்டில் பூட்டிவைத்தேன் .
----- இன்ப மொழிகள் பேசிநின்றாய் .
உதயம் தன்னில் தேடிடுவாய் .
----- உணர்வில் நீயும் மலர்ந்திருப்பாய் .
பதறும் நெஞ்சில் பதித்திடுவாய் .
------ பதியாய் நாளும் நினைத்திடுவாய் .
சிதறும் சிரிப்பில் நீயிருப்பாய் .
------ சிந்தை முழுதும் கலந்திருப்பாய் .!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்