மைனாவின் மனதினிலே
கருவண்டு கண்ணழகி கஞ்சிப்பானை நெறத்தழகி
பூஞ்சிரிப்புச் சொந்தக்காரி பூவினத்தின் ராணிக்காரி
வட்ட மொகம் வதங்கி போனதே
சுட்ட நெருப்பெது சொல்லு கிளியே......
மழையே இல்லாம மல்லிப்பூ மனமே
விழியின் நீரால் நீயும் குளிப்பதேனோ?...
கொளத்து மேலிங்கு வீடுகள் இருப்பதால்
குளிக்கவும் நீரின்றி குடிக்கவும் வழியில்லையோ?......
நஞ்சையும் புஞ்சையும் வெடித்துக் கெடக்குதே
வெதச்ச நெல்லும் கருகி நிக்குதே
கருத்த மச்சான் நெனப்பு வந்து
கண்ணு ரெண்ட கசக்கிட வழியுதோ?......
களத்து மேடாக கழுத்தும் காத்திருக்க
கருவேல மரம்போல் ஒன்னோட ஆசையும்
வேரோடு அறுந்து வேகமா சாயுதோ?...
வேதனை அம்புகள் நெஞ்சுக்குள் பாயுதோ?......
கார்த்திகை மாசமும் கோடையாய் ஆனதால்
கட்டழகன் வாழ்வும் கடனில் மூழ்குதோ?...
வாங்கி வச்சிருந்த மஞ்சத் தாலியும்
அடகு கடையிலே அழகாய்த் தொங்குதோ?......
சித்திரையில் ஆத்தாளுக்கு தேரிழுத்தா
கவலையும் சோகமும் காணாம போயிடுமே
கண்ணால தேதியும் வந்திடுமே
வானத்து நெலவா வசந்தமும் பொங்கிடுமே......