அன்பு அன்னைக்கு ஓர் அணியாரம்(maththru panjagam thamilil)

தாயைச் சிறந்த கோவிலும் இல்லை . என்பது ஆன்றோர் வாக்கு. என்றென்றும் கண்கண்ட தெய்வமாய்க் கண்ணெதிரே தோன்றி கனிவுடன் காக்கும் கருணையின் வடிவான அன்னைக்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை. அத்தகைய அரும் தெய்வத்தைப போற்றிப் பரவுவோர் எல்லாக் காலங்களிலும் எல்லா நலன்களும் பெற்றுய்வார் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. அத்தகைய அரும் தெய்வத்திற்கு ஓர் அன்பு காணிக்கை.
----------------------------------------------------------------------------

கருத் தரித்த நாள் முதலாய் உள்ளிருந்து
கணம்தோறும் காத்தருள் சுரந்து சுரந்து

உருவெடுக்கும் என் உயிரால் ருசி இழந்து
உணவு குன்றி மசக்கை எழ மெலிந்து மெலிந்து

வருத்துகின்ற கவலைஎழும் வேளை தன்னில்
வளர்கின்ற பிள்ளை சுமை சுமந்து சுமந்து

பெருத்த வலி சூழ்ந்துற்ற காலைதன்னில்
பிரசவத்தின் சூல்வலிக்கு இரங்கி இரங்கி

திருத்தமொடு பூமிதன்னில் தவழவிட்டு
உன் சிம்மாசன மடியேற்றி மகிழ்ந்து மகிழ்ந்து

பொறுத்தனை மல மூத்திரம் கழித்த காலை

புன்னகையே பூத்துப் பூத்து முகம் மலர்ந்து மலர்ந்து

கருத்தோடு நலம் கோடி தந்தனை அம்மா!

கடன் சுமை என்மீது மிகுந்து மிகுந்து

உருத்து கின்ற பான்மைத் தீர பதில் எதுவோ?

ஒன்றிக்கு ஒன்றேனும் உவந்து உவந்து
பொருத்தமோடு தீர்த்திட முடியுமோ ?

உன் பொற்பாத மலரடிகள் நினைந்து நினைந்து

உருக்கமோடு உன் திருவடிகள் தொழுவது அல்லால் ஒன்றறியேன் அன்னையே !

பணிந்து பணிந்து வணங்குகின்றேன் உன்னையே..

எழுதியவர் : திருமதி ஜி.எஸ். விஜயலட்சும (16-Jul-11, 9:53 am)
பார்வை : 457

மேலே