இயற்றும் பாவே

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு :

பொதிகைமலைத் தென்றல்வழி பொன்னுலகோர் நாவமர்ந்து
பதமுறவே பழநூலில் பாடலென வேதவழ்ந்து
நிதம்வளரும் தமிழணங்கின் நீடுபுகழ் பாடுவனே !

தாழிசைகள் :

தொல்காப்பி யத்திலே தோன்றியவள் ! வள்ளுவனார்
சொல்லிவைத்த குறளுக்குள் சுடராக வளர்ந்தவள் !

சிலம்பினிலும் மணியினிலும் சீவகனின் கதையினிலும்
இலங்கிடும் காப்பியத்தெ ழுச்சியிலுங் கிளர்ந்தவள் !

சமயத்தோர் பத்தியினால் சமைத்திட்ட பாக்களிலே
இமயத்தைத் தொட்டுணர்ச்சி இட்டுச்சி றந்தவள் !

செம்மொழிக்கே வித்தாகும் செழித்தபல தன்மைகளை
அம்மையவள் தன்னுடனே அமைத்தவிதம் தெளியீரோ ?

பொதுமறையைத் தந்ததமிழ் பொலிவுடனே பலயிசையின்
விதிகண்டு சொன்னதமிழ் வித்தகத்தை அறியீரோ ?

அறிவியலும் அரசியலும் ஆன்மத்தின் மெய்பொருளும்
செறிவுறவே சொன்னதமிழ் செழுமைகளைக் காணீரோ ?

வண்ணகம் :

அன்னையி ளந்தமி ழன்பிலி ருந்தமி
ழுன்னத செந்தமி ழுண்மைசொ லுந்தமி
ழன்றுபி றந்துல லெக்குமு றுந்தமி
ழென்றுமு யந்திடு மெந்தமி ழுன்னுக !

பேரெண்

வண்ணமும் சிந்தும்வ ளைந்து பெருகிடும் !
எண்ணில்மி றைகவி எங்குந் திளைத்திடும் !
ஓசையு ய்ணர்ச்சிக ளோங்கு மிலக்கணம்
பேசுந்த மிழ்மொழி பேற்றை யுரைப்பமே !

அளவெண்

கவிதை கற்பனை கதையொடு கட்டுரை
கணித சாத்திரம் கடின அறிவியல்
அனைத்தின் சிந்தனை அமைந்த மேல்மொழி
அருந்த மிழ்தனை அணித்தது மில்லையே !

இடையெண்

முதன்முதல் வந்தது மிதுவே
முன்னவர் பேசிய திதுவே
மதத்தொடு தேசியங் கடந்து
மனங்களி ணைப்பது மிதுவே !

சிற்றென் !

தமிழே அமிழ்தம்
தமிழே மருந்து
தரணியி லெங்கும்
அரசுறுந் தமிழே
தெய்வம், சாத்திரம்
உய்திடும் மெய்வழி
ஓதி உரைத்த
நீதியுந் தமிழே !

தனிச்சொல்

இவையெல்லாம்

ஆசிரிய சுரிதகம்:

எட்டுத் திசையு மெழிலா யிருக்கும்
மொட்டென மலர்ந்து மொய்த்துக் கிடக்கும்
விசையுறு இளைஞர் வியக்க
இசையேற் றிடுவாய் இயற்றிடும் பாவே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (25-Apr-17, 11:45 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 80

மேலே