நெஞ்சம் தயங்கி நிக்கு
பெத்தெடுத்துப் போட்டுப்பிட்டு பெத்தவளும் செத்து பிட்டா
பாத்துபிட்டு சொந்தமெல்லாம் மனமுருகி அழுதுட் டாங்க
சொத்தெல்லாம் இருக்கான்னு சோகத்தில கேட்டுப் பிட்டு
சொல்லாம கொள்ளாம அங்கிருந்து போயிட் டாங்க !
ஒத்தப்பிள்ளை அவனைநான் உயிராக நினைச்சுக் கிட்டு
ஓடி ஓடி தினமுழைச்சி ஏணியில ஏத்திப் புட்டேன்
முத்திநானும் போனதாலே முதுமையிலே காலிரண்டும்
மூட்டுவலி கொண்டதாலே மூலையிலே தள்ளிட் டாங்க !
தட்டினிலே சோறுபோட்டு தரையினிலே வைச்சு பிட்டு
தின்னுடவே சொல்லிபிட்டு திசைக்கொருவர் செல்லு வாங்க !
முட்டிபோட்டு தவழ்ந்துபோயி முடிஞ்சபோது தட்டெடுத்து
மூலையில இருந்துநானும் முக்கிமுக்கி தின்னுப் புட்டு
கெட்டுப்போன வயிற்றோடு கிடந்தங்கே துடிச்ச போதும்
எட்டிப்பாக்க நாதியில்லை! ஏனிந்த வாழ்க்கை யின்னு
முட்டிமுட்டி அழுதாலும் முடியலேயே ! படைச்சவன்நீ !
கட்டிஎனை இழுத்துசென்று கரைசேர்க்க வந்து போயேன் !
பாசத்தோடு வளர்த்துப்பிட்டேன் பிரிந்துபோக முடியவில்லை
பரந்துவிட்ட பூமியிலே பிழைக்கவழி இருந்த போதும்
மோசமான உடல்நிலையால் முயன்றுபார்க்க இயலவில்லை
மாண்டுபோன பின்னாலே கொள்ளிவைக்க பிள்ளை வேண்டி
ஆசையோடு நான்வளர்த்தும் அரவணைக்க மனசு இல்லை !
அனாதைபோல் ஆக்கிபுட்டு அவன்வழியில் செல்லு கின்றான்
நீசத்தின் குணமென்று நெஞ்சமது அறிந்த போதும்
வெறுப்போடு பிள்ளையினை நினைத்திடவே தயங்கி நிக்கு !