அகண்ட இருளுக்குள் போய்விட்டேன்

அகண்ட இருளுக்குள் போய்விட்டேன்
====================================

ஆழ் உறக்கம் என்னை அமிழ்த்திக்கொண்டிருக்கிறது
எழ வேண்டுமாய் எப்படியெல்லாமோ
எத்தனிக்கிறேன்
என் உடல் உறுப்புகள் அனுமதிப்பதாய் இல்லை
பிறரின் தொடுதல்களுக்கு
மரத்துப்போயிருந்தன
மிக தூரத்திலிருந்து சிலர் என்னை அழைக்கும் சப்தம் கேட்கிறது
மகனோ மருமகளோ இருக்கலாம்
நெருப்பு ஜுவாலையாய் தொடங்கிய வியர்வை வற்றிவிட்டது
உள்ளுக்குள் சூடு குறைந்துகொண்டே இருந்தது
நான் எழுந்து உட்கார வேண்டும்
இன்னும் எனக்கு நிறைய கடமைகள் செய்யவேண்டி இருக்கின்றன
மக்களுக்கான சத்தியம்
மகனும் மருமகளும் இருவருக்குள்ளான கருத்து வேறுபாடுகள்
நான் கொடுத்துத் தீர்க்கவேண்டிய கடன் பாதிதை
எனக்கு வரவேண்டிய கணக்குகள் இனி இது கிடைக்கப்போவதில்லை
என்னை அழைக்கும் சப்தங்கள் பொலிவிழந்துகொண்டே வருகின்றன
என் மனைவியிடம் கடைசியாக போட்ட சண்டைக்குப் பிறகு
சரியாக பேசி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது
என்னோடு கோபித்துக்கொண்டு
அவள் அவளுடைய தாய் வீட்டிற்கு போயிருக்கிறாள்
இந்நேரம் செய்தி போயிருக்கும்
பாகப்பிரிவினை உயிலைப்பற்றி பேசவேண்டும்
அற்ப நேரம் அவளை அணைத்து
உறங்க வேண்டும்
பேரப்பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றிருக்கிறார்கள்
இன்று மூன்று மணிக்கு
தாத்தா மிட்டாய் வாங்கி ஸ்கூல் பஸ் காக காத்திருப்பாரே
இன்று காணோமே ன்னு தேடுவார்கள்
அவர்களை வயிற்றிலே சுமந்து உறங்கவைத்து
கொதி அடங்கவில்லை
வீட்டைத்தவிர வெளியுலகம் தெரியாத மனைவி
புருஷன் வீட்டில் சௌந்தர்ய பிணக்கம் செய்துவிட்டு
அடிக்கடி என்கிட்டே வந்து
புகார் சொல்லும் மகள்
பிடிவாத மருமகள்
பொறுப்பில்லாமல் சம்பாதியத்தை செலவு செய்துவிட்டு
வீட்டுக்கு தாமதமாகவே வரும் மகன்
இவர்களுக்கெல்லாம்
இதுவரையான தைரியமாக "அப்பா இருக்காரே" என்னும்
என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையினை
காப்பாற்றமுடியாமல்
இந்த ஆழ் உறக்கம் என்னை மிகையாக ஆட்கொள்ளுகிறதே
என் விழிக்கரைகளினோரம்
வெள்ளப்போக்கு உணர்கிறேன்
யாரோ சிலர் என் படுக்கையை பரிசோதிக்கிறார்கள்
ஜலமலம் போயிருக்கா என்று
என் மகன்
அவன் மனைவியிடம்
"பயப்படாதே" அப்பாவோட முகத்தை பிடிச்சுக்கோ ன்னு சொல்றான்
தணிந்துகொண்டிருக்கும் என் உடலை
அவன் பலமான கரங்களால் நிமிர்த்தி இருக்கவைக்கிறான்
மிச்ச சூடு நெஞ்சுக்கும் தொண்டைக்குழிக்குமிடையே
இழைவிட்டபடி இருக்கிறது
என்னை நேரே இருத்தியவன்
மருமகளை பார்த்து என் முகத்திலிருந்து கைகளை எடுக்கச் சொல்கிறான்
என்னால் என் கழுத்தை சமநிலையில்
வைக்க முயன்றும் முடியவில்லை
கழுத்தும் முகமும் முன்வாசம் சரிந்துவிட்டது
மூக்கிலிருந்து வாயிலிருந்தும்
நிறைய சளிநீர் பொங்கியிருந்தது
மகன் தன் கைகளால் வாங்கி சுத்தம் செய்கிறான்
சுற்றியிருந்த எல்லோரும்
வாயிலும் மூக்கிலும் விரல் பொத்திக்கொண்டு
ஊளையிடும் தோரணையில்
அழுதார்கள்
அறுந்துகொண்டிருக்கும் நினைவு நூலில்
என் மனைவியுடைய சப்தம் உணராமல் போகிறேன்
ஆம் அவள் வந்துகொண்டிருப்பாள்
இறுக்கம் தொலைத்துவிட்ட என் உள்ளங்கைகளுக்கு
அவளுடைய சூடு வேண்டுமே
உதடும் நாவும் வறண்டு பிரிந்து போயின
அவளைத் தவிர
என்னைச்சுற்றி எல்லோரும் வந்துவிட்டார்கள்
தாகமற்ற எனக்குள்
பாலூற்றிக் கொண்டிருந்தார்கள்
துளி சூடு இப்போது தொண்டைக்குழியில் மட்டுமே இருக்கிறது
வாசல் வரை வந்துவிட்டவளை
பயப்படவேண்டாம் பயப்படவேண்டாம் என
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்
கைத்தாங்கலாக அழைத்து வருகிறார்கள்
என் அருகே இருந்தவளுடைய சப்தம் இறந்து போயிருந்தது
யாரேனும் சொல்லுங்கள்
என் உள்ளங்கைகளுக்கு அவளுடைய வெம்மை வேண்டும்
என் உள்ளங்கைகளை அணைக்கச்சொல்லுங்கள்
அவளை திடப்படுத்திக் கொண்டு
முக்காடு போர்த்தி
அழ ஆயத்தமாகிறாள், மன்னிப்புக்கோருகிறாள்
இறைவா
நான் எழவேண்டும், நான் வாழவேண்டும்
முடியவில்லை அகண்ட இருளுக்குள் போய்விட்டேன்
என் உள்ளங்கைகளை அணைக்கிறாள்
எனக்கு அந்த வெம்மையை அணைக்க முடியவில்லை
என் ஆறாம் அறிவு
ஒளியிழந்திருக்கிறது
அகண்ட இருளுக்குள் போய்விட்டேன்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (1-May-17, 2:19 pm)
பார்வை : 113

மேலே