பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு வெளிச்சம் தேடும் வேளாண்மை கவிஞர் இரா இரவி
பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு !
வெளிச்சம் தேடும் வேளாண்மை ! கவிஞர் இரா .இரவி !
இருளில் மூழ்கி வருகிறது வேளாண்மை
இருளை நீக்கி வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் !
அயல்நாட்டு குளிர்பானங்கள் குடிப்பதை
அறவே நிறுத்திட அனைவரும் முன்வர வேண்டும் !
அயல்நாட்டு உரங்களையும் பூச்சி மருந்துகளையும்
அறவே ஒழித்து இயற்கை உரம் மருந்து தெளிப்போம்
வேளாண்மையால் விளைந்து வரும் சத்து மிக்க
வெப்பம் தணிக்கும் இளநீர் அருந்திட வேண்டும் !
வேளாண் பொருள் விலையில் பேரம் பேசாதீர்கள்
வேளாண் செழிக்க அனைவரும் துணை நில்லுங்கள் !
உழவன் படும் துன்பத்தை நினைத்துப் பாருங்கள்
ஒன்றை விளைவிக்க படும் பாட்டை உணருங்கள் !
இயற்கை மழையோ பொய்த்து வாட்டுகின்றது
இரக்கமில்லா மனிதர்களும் தர மறுக்கின்றனர் !
கடன் வாங்கி நட்டதில் நட்டம் அடைகிறான்
கரும்பு நெல் எது நட்டாலும் நட்டம் அடைகிறான் !
ஒரு நாடு செழிக்க வேண்டுமானால் வேளாண்மை
ஓங்கினால்தான் நாடு செழிக்கும் உணர்வோம் !
மனிதஇனம் உயிர் வாழ உணவு அவசியம்
மற்ற அனைத்திலும் உயர்வானது வேளாண்மை !
ஊருக்கே சோறுப் போட்டவன் வாடலாமா ?
ஊர் கூடி உதவிடுவோம் உழவர்களுக்கு !
மனம் வெறுத்து தற்கொலை செய்ய விடலாமா ?
மாந்தநேயம் காக்க உழவர்களைக் காப்போம் !
இதுவரை தற்கொலை செய்த எண்ணிக்கை போதும்
இனி ஒருவரையும் தற்கொலை செய்ய விடாது காப்போம் !
வெளிச்சம் தேடும் வேளாண்மைக்கு எல்லோரும்
வெளிச்சம் பாய்ச்சிட உதவிக்கரம் நீட்டுவோம் !