நீ வருவாய் என
நீ வருவாய் என . . .
மயிற்பீலியாய்
வருடும்
உன் பார்வையில்
மயிர்க்கூச்செறிந்த
தருணத்தை
செயற்கையாய் உருவாக்கி
வடிக்கின்றேன்
வியர்வைக் கால்களை . . .
நீ வீசிய
வெறுப்பின் சிறு கூழாங்கல்
பாராங்கல்லாய்
உருவெடுத்து அழுத்தினாலும்
சுகமான சுமையாய்
சுமக்கின்றேன்
மனதால் . . . .
இதயத்தில்
நீ தூவிய
காதல் விதைகள்
வனமாகிப் போனதில்
தொலைந்த மனதை
தேடவில்லை
இந்நாள்வரை . .
உன் . . .
சிரிப்பொலி மறைந்த
திசைதனில் தேடி
காற்றில் துலாவிய
கைகளுக்கு மிஞ்சும்
வெறுமையை
வெறிக்கின்றேன்
பார்வையில் . . . . . .
நீ. . .
கொட்டிய வார்த்தை
மழையின்
துளியளவும் சிதறாமல்
அணையிட்டுக் காக்கின்றேன்
நினைவு வெள்ளத்தில் . . .
அலைகளைக்
கரையோடு
கட்டிவைக்கும்
காரியமாய்
உன் ஞாபகங்களைக் கட்ட
சிலாகித்து தவிக்கிறது
என் முயற்சி . .
ஊறிய
உயிர் சத்தாய்
உன் பெயரே
என் மூச்சைத் தாங்கி
ஓடுகிறது
என் இரத்த நாளமெங்கும். . .
யுகங்களைக் கடந்தும்
நீளும் வாழ்வினை
தருவாய் நீ என
என் நம்பிக்கை
கிரணங்களால்
படர்கின்றேன்
வான் தாண்டி . .. .
உளமெங்கும்
முளைவிட்ட
வெறுமைப் பயிர்கள்
அறுவடைக்கு
முதிரும் முன்
காத்திருக்கிறதே
காவலாய் உயிர் . .
நீ வருவாய் என . . . . . . . .
சு.உமாதேவி